

நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எல்லோராலும் கேட்கப்படுகிறது. பல நடிகர்கள் அரசியலுக்குள் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட சிலரே நீண்ட காலம் கட்சியில் இருந்தனர். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் தவிர மற்ற யாராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.
விஜய் அவர்கள் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களுக்கும் நேரம் பார்த்து செய்கிறாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் அதிகாரப்பூர்வமான கட்சி கொடியை சங்கடகர சதுர்த்தி நாளில் குளிகை நேரத்தில் வெளியிட்டார். குளிகை நேரத்தில் இது போன்ற நல்ல காரியங்களை செய்யலாமா என்பது பற்றி பார்க்கலாம்.
குளிகை நேரத்தில் தொடங்கும் அல்லது செய்யும் செயல்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். உதாரணமாக நீங்கள் தங்க நகை வாங்கினால் மீண்டும் தங்கம் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள். அதேபோல் வெற்றி பெறக் கூடிய காரியங்களில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் மீண்டும் மீண்டும் அந்த வெற்றி உங்களையே தேடி வரும். இதனால் எந்த ஒரு பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை குளிகை நேரத்தில் செய்வது உதவியாக இருக்கும்.
அதேபோல் குளிகை நேரத்தில் எல்லா நல்ல காரியங்களையும் செய்ய இயலாது. குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் கருத்தில் கொண்டு தான் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைவரான விஜய் அவர்கள் குளிகை நேரத்தில் தனது கட்சி கொடியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா எந்த ஒரு சிறிய காரியம் ஆனாலும் அதை ஜோதிட முறையில் மட்டுமே அணுகினார் என்ற கருத்துக்களும் உண்டு. அதே வழியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களும் எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் கால நேரம் பார்த்து செய்து கொண்டிருக்கிறார் என்ற பேச்சுகளும் எழாமல் இல்லை.
த.வெ.க தலைவர் விஜய், சமீபத்தில் வெளியிட்ட பட்டியல்கள் அனைத்துமே, 19 பேரை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதனால், அவர் ஜோதிடர் சொல்வதுபோல் செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு முறை நடந்திருந்தால் தற்செயல் என கூறலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் இதே போன்று எண்களில் தற்செயலாக நடக்காது. தவெக இதுவரை, 2 மாவட்ட செயலாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல், முக்கிய பொறுப்புகளில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரை நியமித்து ஒரு பட்டியல் வெளியானது.
இவை எல்லாவற்றையும் கவனித்து பார்த்தால், ஒவ்வொரு பட்டியலும் 19 பெயர்கள் கொண்ட பட்டியலாகவே இருந்தது. அங்குதான் தவெகவினர் உள்ளிட்ட அனைவருக்குமே சந்தேகம் எழுந்துள்ளது. ஜோதிட ரீதியாக, ஒன்று என்பது சூரியனின் ஆதிக்கத்தையும், 9 என்பது செவ்வாயின் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இதில், ஆட்சி, அதிகாரம், உழைப்பு, தலைமைப் பண்பு ஆகிவற்றிற்கு உகந்ததாக சூரியனும், ஆற்றல், தைரியம், உறுதி ஆகியவற்றிற்கு உகந்ததாக செவ்வாயும் இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆகவே, 1 மற்றும் 9 ஆகிய இவ்விரண்டு எண்களையும் இணைத்து, அந்த எண்ணை பயன்படுத்தும்போது, அதற்கான பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒரு வேலை விஜய் ஜோதிட நம்பிக்கையில் ஏதேனும் ஜோதிடரை நம்பி செய்கிறாரோ என்ற எண்ணம் பரவலாக அனைவருக்குமே தோன்றுகிறது.
ஒரு பக்கம் இதையெல்லாம் எதிர்த்த பெரியார் பாதையை ஆதரிக்கும் விஜய், சனாதனம் பேசும் பாஜகவையும் எதிர்க்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் இப்படி ஜோதிடம் பார்த்து செயல்படுகிறார் என தவெகவினரே பலர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கின்றனர்.
இதே போலத்தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பொதுவெளியில் பெரியாரின் கொள்கைகளை உடையவராக செயல்பட்டார். ஆனால், அவர் வாஸ்து, ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் ஜோதிடரை கலந்தாலோசித்து வீட்டில் கூட சில மாற்றங்களை செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கழுத்தில் மஞ்சள் துண்டு அணிந்தது, ஜோதிடர் ஒருவர் கூறியதால் தான் என்ற பேச்சும் இருந்தது. இந்த பேச்சு இப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவியரான திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கையால் அவர் மீதும் அவ்வப்போது வைக்கப்படுகிறது
அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தன் மீது கிரிமினல் வழக்குகள் இருந்து தேர்தலில் போட்டியிட முடியாமல் போனபோதிலும், 2001-ல் அவர் முதலமைச்சராக ஆவார் என்று கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறியபடி முதலமைச்சர் ஆனதால், பணிக்கருக்கு சன்மானமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதுடன், அவர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக மாறினார்.
ஜெயலலிதாவும் பழனி முருகன் கோவில் திருகுடமுழுக்கு உட்பட பல கோயில்களுக்கு ஏராளமானவற்றை செய்துள்ளார். இதே வரிசையில் அமைச்சர் சேகர்பாபு உடனிருக்க முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கோவில்களுக்கு திருப்பணிகளை செய்துவருகிறார். சமீப காலமாக விஜய் அவர்கள் தனது ஒவ்வொரு பொதுக் குழு கூட்டத்திற்கும் மக்களை சந்திப்பதற்கும் கால நேரம் கணித்து தான் செல்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி, முக்கிய அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையில், ஜோதிடம் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ள போது, விஜய் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கேற்றார்போல், தற்போது விஜய்யின் சில செயல்பாடுகள் உள்ளதால், அவர் ஜோதிடர் பிடியில் சிக்கியுள்ளாரோ என தவெகவினர் உட்பட பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.