“விவசாயிகளுக்கு நிதி இல்லையாம்.. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் நிதியா?” - தஞ்சையில் உதயநிதியின் அதிரடி கேள்வி!

தற்போதைய அரசு மாநிலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறியுள்ளார்...
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், விவசாயிகள் பிரச்னை, தேர்தல் வாக்குறுதிகள், சட்டப்பேரவை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளும் கட்சியை விமர்சித்து கருத்துகளை தெரிவித்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் எங்கு பேசினாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் கவனமாக பேச வேண்டும். நான் பேசியபோது கீழிருந்து பேசிய ஒருவர் என்னை மாட்டிவிட்டார். தற்போது சந்திரசேகரன் என்னை மாட்டிவிட்டிருக்கிறார். அதற்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும். கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் உதயநிதி கிடையாது” என்றார்.

தொடர்ந்து விவசாயிகள் பிரச்னை குறித்து பேசிய அவர், புதிய அரசு அமைந்து 105 நாட்கள் கடந்துள்ள நிலையில், அரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என குற்றம்சாட்டினார். மேட்டூர் அணையில் இருந்து இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வறட்சி நிவாரணம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியபோது, ஏற்கனவே சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் தெரிவித்ததாக கூறிய உதயநிதி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நிதி இல்லை என கூறும் அரசு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க நிதி ஒதுக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

“திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்த்து வையுங்கள்” என தங்கள் தரப்பில் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் உதயநிதி குற்றம்சாட்டினார். சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்த அவர், “முன்பு சட்டப்பேரவையில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிப்பார்கள். தற்போது கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் பாட்டு பாடுகிறார்கள். சட்டப்பேரவைக்கு வருகிறார்களா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகிறார்களா என்ற நிலை உள்ளது” என விமர்சித்தார்.

மக்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கேள்விகளை தாங்கள் குறிப்பெடுத்து சட்டப்பேரவைக்கு செல்வதாகவும், ஆனால் தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரச்சனைகளை பேசுவதை விட சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதில் கவனம் செலுத்துவதாகவும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருந்ததாக கூறிய உதயநிதி, தற்போதைய அரசு மாநிலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சருக்கு அக்கறை இல்லை என்றும், தற்போது தான் மக்கள் இதனை உணரத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். “விரைவில் இந்த ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கும், கோமாளித்தனத்திற்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com