
கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த கோர தீ விபத்தை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த தனியார் பள்ளியான ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெரும் பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தது. மேலும் 14 குழந்தைகள் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.
ஒரே நாளில் 94 குழந்தைகள் உயிரிழந்தது தமிழ் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. பல ஆசைகளோடும் கனவுகளோடும் இருந்த குழந்தைகள் மொத்தமாக தங்களது ஆசைகளுடன் சேர்ந்து தீயில் கருகி உயிரிழந்தது, இன்று நினைத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சம்பவமாகவே உள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு ஜூலை 16ஆம் தேதி உயிரிழந்தவர்களுக்கான நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்றோடு அந்த கோர சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆன நிலையில் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியின் முன்பு 94 குழந்தைகளுடைய புகைப்படம் வைத்து அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.