

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மனு அளித்துள்ளார்.
மலை உச்சியில் உள்ள தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற இடைக்கால உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படவில்லை. பாரம்பரிய முறைப்படி உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதற்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து மனு அளித்துள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். அந்த மனுவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவெக அரசு மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
ஆளுநரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த, நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முதல்வர் விஜய் மதிக்கவில்லை” என்றும் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் விவகாரம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, உச்சபட்ச அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று உத்தரவை தமிழக முதலமைச்சர் மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அவமதித்துள்ளது.. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.
மேலும் "திருப்பரங்குன்றத்தில் காவல்துறை பாதுகாப்பு என்ற பெயரில் அத்துமீறல் நடந்துள்ளது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எல்லாம் உண்மையான போலீசா? என்பது தெரியவில்லை. காவல்துறை உடையில் ரவுடிகள் வந்தது போல் இருந்தது."
அதையடுத்து கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த விவகாரத்தில் அவர் மீது புகார் பதியப்பட்டது குறித்து கேள்வி செய்தியாளர் ஒருவர் எழுப்பினர். “கள்ளக்குறிச்சி MLA மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் விசாரணை மட்டும் தான் நடந்துட்டு இருக்கு, அரசுக்கு எதிரா பேசுபவர்களை இரவோடு இரவாக கைது செய்யும் இந்த அரசு, MLA-வை இதுவரை கைது செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சர் விஜய்க்கு இதெல்லாம் தெரியுமா என்றே தெரியவில்லை. இந்த வழக்கு கண்டிப்பாக சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும். அது தான் பாஜகவின் நிலைப்பாடு." "மூன்று மாதமா FIR போடாதவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? இந்த ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாடு போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. எனவே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் தவெக-வை சேர்ந்த நிர்வாகிகளே ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பரகுன்றத்தில் திமுக ஆட்சியில் தீபம் ஏற்றப்படவில்லை, அதேபோல் இந்த ஆட்சியிலும் தீபம் ஏற்றப்படவில்லை. அவர்கள் எப்படி காணாமல் போனார்களோ, அதேபோல் இவர்களும் எதிர்காலத்தில் காணாமல் போவார்கள் என்றும் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்