

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர். இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அதிமுகவுடன் பாஜகவை தவிர மற்ற எந்த கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் இருந்தது. எனவே அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக மற்றும் பாமகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
மேலும் கடந்த வாரம் பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” பிரச்சார நிறைவு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் தேமுதிகவையும், பாமகவையும் விரைவில் கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு கூறியதாக சொல்லப்படும் நிலையில் இன்று(ஜன 07) பாமக -வின் அன்புமணி தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக கூட்டணியில் இணைத்துள்ளனர்.
இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி அதிமுக கூட்டணியில் பாமக இணைவதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோரும் அன்புமணியுடன் வழக்கறிஞர் பாலு மற்றும் திலகபாமா ஆகியோர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி “இரு கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும், இது இயற்கையான கூட்டணி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும் அரசாங்கத்தை இந்த கூட்டணி அமைக்கும் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த இந்த கூட்டணி இரவு பகல் பாராமல் உழைப்போம். தொகுதிகள் பங்கீடு எல்லாம் முடிவு செய்து விட்டோம் அதனை பின்னர் அறிவிப்போம்” என தெரிவித்தார் அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி “அதிமுக தலைமையிலான கூட்டணியில் இன்று பாமக இணைத்துள்ளது ஒரு மகிழ்ச்சியான தருணம்.
எங்கள் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வலுவான கூட்டணியாக இது அமைந்துள்ளது. ஊழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், உழைக்க வர்த்தகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் அதற்காகவே அதிமுக கூட்டணியில் இணைத்துள்ளோம்” என தெரிவித்தார். மேலும் இருவரும் பேசி முடித்த பிறகு செய்தியாளர் ராமதாஸ் பற்றி கேள்வி எழுப்பிய நிலையில் அன்புமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கேள்வியை தவிர்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.