திகார் சிறையா? பாஜக கூட்டணியா? டிடிவி தினகரனின் அரசியல் 'யு-டர்ன்' காரணம் என்ன?

டெல்லிக்கு அடிக்கடி அழைத்துச் சிறையின் கடுமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுவதே...
திகார் சிறையா? பாஜக கூட்டணியா? டிடிவி தினகரனின் அரசியல் 'யு-டர்ன்' காரணம் என்ன?
Published on
Updated on
2 min read

தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்துள்ளார். இது குறித்து மாலை முரசு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அரசியல் ஆய்வாளர் ஆர்.கே, டிடிவி தினகரனின் இந்த முடிவை மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் மாதம் கூட்டணியிலிருந்து விலகிய தினகரன், தற்போது மீண்டும் இணைந்திருப்பதற்குப் பின்னால் அரசியல் கொள்கைகளை விட, தனிப்பட்ட பயங்களே அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, டெல்லியில் தற்போது நிலவும் கடும் குளிரை விட, திகார் சிறையின் குளிர் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஆர்.கே நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முக்கியக் காரணமாக, இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2017-ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கைக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் கூட்டணியிலிருந்து விலகிய பிறகு இந்த வழக்கின் விசாரணை வேகம் பெற்றதை ஆர்.கே கோடிட்டுக் காட்டினார். எனவே, 'ஒன்று சிறை அல்லது கூட்டணி' என்ற நிலையில் தள்ளப்பட்ட தினகரன், வேறு வழியின்றி பாஜாக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சமரசம் செய்துகொண்டதாகத் தெரிகிறது.

பாஜாகவின் இந்த அரசியல் அணுகுமுறையை 'வாஷிங் மெஷின் ஃபார்முலா' என்று ஆர்.கே கடுமையாகச் சாடினார். பாஜாக கூட்டணியில் இணைந்தால் எத்தகைய ஊழல் வழக்குகளும் துடைத்து எறியப்படும் என்பதற்குப் பல உதாரணங்களை அவர் அடுக்கியுள்ளார். ஒரு தலைவர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு, மற்றொருவர் மீது கொலை வழக்கு, இன்னொருவர் மீது போபால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கு எனப் பல நிலுவையில் உள்ளன. இவர்களுக்கெல்லாம் மத்திய அரசு தரும் ஒரே 'ஆஃபர்' என்னவென்றால், பாஜாகவுடன் இருந்தால் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதாகும். டெல்லிக்கு அடிக்கடி அழைத்துச் சிறையின் கடுமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுவதே இப்போதைய ஃபார்முலாவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேமுதிகவும் தற்போது இந்தக்கூட்டணியில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதுவரை தேமுதிக தலைவர்கள் மீது பெரிய அளவில் ஊழல் வழக்குகள் ஏதும் இல்லை என்றாலும், அவர்களைக் கூட்டணிக்குள் கொண்டு வர அமலாக்கத்துறை (ED) போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படலாம் என்று ஆர்.கே கணித்துள்ளார். அதே சமயம், டிடிவி தினகரனின் இந்தச் சரணடைவை எடப்பாடி பழனிசாமியின் மாபெரும் வெற்றியாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியைத் தரக்குறைவாக நடத்தியவர்கள், இன்று அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு 'ஐயா பழனிசாமி' என்று அழைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவியைத் தக்கவைத்தது முதல், சிதைந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்தது வரை எடப்பாடி பழனிசாமியின் அரசியல் ஆளுமை வியக்கத்தக்கது என்று ஆர்.கே பாராட்டினார்.

இந்த அரசியல் நகர்வுகள் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஒரு பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான இந்த பலமான கூட்டணி, வரும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com