தவெக செய்த அந்த ஒரு 'பிளண்டர்' மிஸ்டேக்.. குருமூர்த்தி சொல்வது என்ன?

ஆளுநரிடம் விஜய் கொடுத்த கடிதத்தில் 120 பேரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது...
VIJAY AND GURUMOORTHI
VIJAY AND GURUMOORTHI
Published on
Updated on
1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி குறித்து அரசியல் விமர்சகர் எஸ்.குருமூர்த்தி விரிவாகப் பேசியுள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிக மோசமான ஆலோசனைகளைப் பின்பற்றியதே தற்போதைய குழப்பங்களுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனிப்பெரும் கட்சியாக உரிமை கோருவதற்குப் பதிலாக, காங்கிரஸ் கட்சியின் பேச்சைக் கேட்டு ‘கூட்டணி ஆட்சி’ என்ற முறையை முன்மொழிந்தது விஜய்க்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்கள் ஆரம்பத்திலேயே ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக குருமூர்த்தி கூறுகிறார். முதலில் ஒரு மூத்த அரசியல் தலைவர் விஜய்யைத் தனிப்பெரும் கட்சியாக ஆளுநரைச் சந்திக்கச் சொன்னதாகவும், அப்படிச் செய்திருந்தால் ஆளுநர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் அழுத்தம் காரணமாக, அவர்கள் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ‘கூட்டணி ஆட்சி’ என்று குறிப்பிட்டது தொழில்நுட்ப ரீதியாக விஷயத்தைத் திசைதிருப்பி விட்டது. இதனால் ஆளுநர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களைத் தனித்தனியாகக் கேட்க வேண்டிய கட்டாயம் உருவானதாக அவர் விளக்குகிறார்.

ஆளுநரிடம் விஜய் கொடுத்த கடிதத்தில் 120 பேரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலில் வெறும் 116 எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் மட்டுமே இருந்தன. மொத்தம் 232 இடங்களைக் கொண்ட அவையில் (பாஜகவைத் தவிர்த்து), 116 என்பது ஒரு சமநிலையைத் (Tie) தான் குறிக்கும். இத்தகைய இக்கட்டான சூழலில் ஆளுநரால் எப்படி முடிவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய குருமூர்த்தி, விஜய்யின் கட்சித் தலைமைக்கு வழங்கப்பட்ட முதிர்ச்சியற்ற ஆலோசனைகள் விஜய்யை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே சிக்கலில் தள்ளியுள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் போன்ற கட்சிகள் தங்களது ஆதரவில் உறுதியாக இருப்பதால், விஜய் முதலமைச்சராக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் குருமூர்த்தி நம்புகிறார். மற்ற சில கட்சிகள் பேரம் பேசிக் கொண்டிருந்தாலும், திமுக தரப்பிலிருந்து யாராவது ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஐயுஎம்எல் (IUML) போன்ற கட்சிகளில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும் இந்த இழுபறிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்த அனைத்து குழப்பங்களுக்கும் வரும் திங்கட்கிழமை (மே 10) விடை கிடைக்கும் என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com