
நாம் தமிழர் கட்சியின் முன்னணி முகங்களில் ஒருவராக இருந்த பி. காளியம்மாள், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியிருப்பது, தமிழக அரசியல் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அவரது அரசியல் பயணமும், கட்சியில் இருந்த போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், விலகலுக்கான காரணங்களும், எதிர்கால அரசியல் முடிவுகளும் முக்கியமானவை.
பி. காளியம்மாளின் அரசியல் பயணம் :
காளியம்மாள் ஒரு சமூக செயற்பாட்டாளராக தனது பணியைத் தொடங்கினார். மீனவ சமூகத்தைச் சேர்ந்த அவர், சமூக நீதிக்கான போராட்டங்களில் ஈடுபட்டு, தன்னுடைய அசாத்திய பேச்சாற்றலால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதன் மூலம் அவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவராக மாறினார். இவர் நாம் தமிழர் கட்சி சார்பில் 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் போட்டியிட்ட அவர், கட்சியின் கொள்கைகளை உறுதியாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டார். குறிப்பாக, மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, பெண்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் பல கருத்துகளை முன் வைத்தார்.
விலகலுக்கான காரணங்கள் :
காளியம்மாளின் விலகல், நாம் தமிழர் கட்சியில் உள்ள உட்கட்சி சிக்கல்களையும், கருத்து வேறுபாடுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. கட்சியின் முக்கியமான முடிவுகளில் மகளிர் பாசறைக்கு போதிய இடமளிக்கப்படவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக காளியம்மாள் தரப்பில் சொல்லப்படுகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைமைக்குள் ஒருமித்தமாக வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும், கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மகளிர் பாசறையின் செயல்பாடுகளில் முழு சுதந்திரம் வழங்கப்படாதது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
காளியம்மாள் போன்ற முக்கியமான தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவது, நாம் தமிழர் கட்சிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது. இது கட்சியின் மகளிர் ஆதரவாளர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும், கட்சியின் உள்கட்டமைப்பில் மாற்றம் தேவைப்படும் தருணம் வந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. காளியம்மாளின் விலகலுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், தன்னுடைய விலகுக்கு இது தான் காரணம் என காளியம்மாள் தரப்பில் இருந்து இதுவரை எந்த காரணமும் சொல்லப்படவில்லை. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடனேயே தன்னுடைய மொபைல் போனை ஸ்விட் ஆஃப் செய்து விட்டார் காளியம்மாள்.
அடுத்த கட்ட அரசியல் பயணம் :
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியில் இருந்து விலகிய பிறகு, அவர் எங்கே செல்ல போகிறார் என்பதற்கான கேள்வி தமிழக அரசியலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரின் கட்சி மாற்றம், தனிக்கட்சி தொடங்கும் சாத்தியம், அல்லது அரசியலில் இருந்து முழுமையாக விலகுவாரா என பல விதமான விஷயங்கள் சொல்லப்படுகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் எந்த அளவிற்கு சாத்தியம் உள்ளது என்பதை கொளஞ்சம் அலசி பார்க்கலாம்.
1. காளியம்மாள் தனிக்கட்சி தொடங்குவாரா?
அவரது நீண்ட கால அரசியல் பாதையை கருத்தில் கொண்டால், தனிக்கட்சி தொடங்குவதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளது. காரணம்,
தனிக்கட்சி ஆரம்பிக்க பெரிய அரசியல் ஆதரவும், பொருளாதார ஆதரவும் தேவைப்படும். தமிழகத்தில் ஏற்கனவே பல சிறு கட்சிகள் இருப்பதால், தனிப்பட்ட முறையில் வெற்றி பெறுவது கடினம். நாம் தமிழர் கட்சியில் இருந்ததன் மூலம் அவருக்கு ஒரு அடிப்படை ஆதரவு இருக்கலாம். ஆனால் தனியாக ஒரு இயக்கத்தை வளர்ப்பது கடினமான முயற்சி.
அதற்கு பதிலாக சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் ஒரு அமைப்பை தொடங்கி, அதன் மூலமாக அரசியல் செல்வாக்கை உருவாக்கலாம். தமிழ் தேசிய உணர்வை மையமாகக் கொண்டு, புதிய பெண்கள் மற்றும் மகளிர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்கலாம்.
2. ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளில் சேருவாரா?
காளியம்மாளின் அரசியல் திசைபோக்கை கணிக்கும்போது, சில முக்கிய கட்சிகளில் சேரும் வாய்ப்புகளும் உள்ளது.
திமுக.,வில் இணைவாரா?
திமுக ஒரு பெரிய கட்சி, இதில் அவர் இணைந்தால் அவருக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்பு அதிகம். பெண்களின் அரசியல் உரிமையை வலியுறுத்தும் வகையில், திமுகவுடன் அவரது கொள்கைகள் சில ஒத்துப் போகலாம். ஆனால், திமுகவில் ஏற்கனவே பல சக்திவாய்ந்த பெண்கள் உள்ளனர் இது அவரது வளர்ச்சிக்கு தடையாக இருக்கலாம். அது மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியில் இருந்த போது திமுக.,வையும் அதன் முக்கிய தலைவர்களையும் மிக கடுமையாக தாக்கி பேசியவர் காளியம்மாள். அதனால் அவர்கள் கட்சியிலேயே போய் சேருவதற்கான வாய்ப்பு குறைவு தான்.
அதிமுக.,வில் இணைவாரா?
அதிமுக வலுவாக மகளிர் ஆதரவைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி. ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுக, பெண்களின் முக்கியத்துவத்தை புரிந்திருக்கும் ஒரு கட்சி என்பதால், அவருக்கு நல்ல இடமாக இருக்கலாம். ஆனால், அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக உடைந்துள்ளது. இந்த சமயத்தில் காளியம்மாளின் வரவு புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்.
பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளதா?
தமிழக பாஜக தற்போது வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால், காளியம்மாள் தமிழ் தேசியவாத அரசியலை அடிப்படையாக வைத்திருப்பதால், பாஜகவில் செல்வதற்கான சாத்தியம் மிகவும் குறைவு. பாஜகவில் செல்வது, அவருடைய தனிப்பட்ட அடையாளத்தை குலைக்கும்.
பாஜக-வின் பாரம்பரிய இந்துத்துவ கொள்கைகள், அவர் முன்பு வலியுறுத்திய கொள்கைகளுடன் முரண்படும். ஆனால், அவர்கள் பெண்கள் தலைமைக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார்கள் என்பதால், அவருக்கு ஒரு புதிய இடம் கிடைக்கலாம்.
தவெக.,வில் இணைவாரா?
விஜய்யின் தமிழ் வெற்றிக் கழகம் பெண்கள் பலரை கொள்கை தலைவர்களாக அறிவித்துள்ள கட்சியாக உள்ளது. அதனால் காளியம்மாளுக்கு அங்கு இடம் தருவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி காளியம்மாள், விஜய் கட்சியில் இணைந்தால் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா?
காளியம்மாள் ஒரு தீவிர அரசியல் போக்கை கடைப்பிடித்தவர் என்பதால், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவாரோ என்று சந்தேகம் உள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர் அரசியல் துறையில் இருந்து விலகி, சமூக சேவையில் கவனம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. கட்சி அரசியலில் ஏற்பட்ட மன உளைச்சல், தனிப்பட்ட குடும்ப காரணங்கள், ஏற்கனவே அவர் சமூகப்பணியில் ஈடுபட்டிருப்பதால், அரசியலை விட அது அவரது பிடித்தமான துறையாக இருக்கலாம்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காளியம்மாளிடம் திமுக அல்லது தவெக.,வில் இணைவீர்களா என செய்தியாளர்கள் கேட்ட போது, அது பற்றி தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தன்னுடைய சமூகத்தின் முடிவே தன்னுடைய முடிவு என்றும், தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றி தன்னுடைய சமூகம் எடுக்கும் முடிவு, தன்னுடைய முடிவாக இருக்கும் என கூறி உள்ளார். இதனால் மேலே சொன்ன ஆப்ஷன்களில் காளியம்மாள் எதை தேர்வு செய்வார் என்பதை தெரிந்து கொள்ள தமிழக அரசியல் களமே ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.