விஜய் மீது பொறாமையா..? “ நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்” – ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

“சம்பிரதாயத்திற்காக நான் யாரையும் சந்திக்க மாட்டேன்,” என்று தெளிவாக பதிலளித்தார்.
rajinikanth about vijay
Published on
Updated on
2 min read

தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வகையில் நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சினிமா தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து வெளியாகிய தகவல்கள், நடிகர் விஜயின் அரசியல் வருகை, தனது அரசியல் முடிவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு நான் பதில் தரவில்லை அது உண்மையாகிவிடும் என தொடங்கிய ரஜினிகாந்த் நடிகர் விஜயுடன் ஒப்பிடப்படுவது குறித்து பேசினார். “எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை வித்தியாசம் இருக்கிறது. நான் சிறுவயதிலிருந்தே விஜயை பார்த்து வருகிறேன். அவர் முதலமைச்சரானத்தில் எனக்கு பொறாமை எதுவும் இல்லை. மாறாக ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சிதான் உள்ளது,” என்று தெரிவித்தார். மேலும், “இவ்வளவு இளம் வயதில், அதுவும் சினிமா துறையில் இருந்து வந்து, மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் இரு பெரிய திராவிட கட்சிகளும் இருக்கும் சூழலில் தனியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. மக்கள் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

அதிமுக – திமுக கூட்டணிகளை இணைக்கும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த தகவல் பொய் என்று மறுத்துவிட்டார். நீங்கள் அரசியலுக்கு வராதது ஏன் என்ற கேள்விக்கு, “நான் அரசியலுக்கு வராத காரணங்களை மூன்று பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். அதற்கு பிறகும் ஏன் வரவில்லை என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை,” என்று கூறினார்.

“அரசியல் வேறு.. சினிமா வேறு..”என குறிப்பிட்ட ரஜினிகாந்த், “சினிமாவில் தவறு நடந்தாலும் யாருக்கும் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையை சேர்ந்த பெரிய பொறுப்பு,” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டபோது, நீங்களும் விஜயை சந்திப்பீர்களா என கேட்டதிற்கு?.. “சம்பிரதாயத்திற்காக நான் யாரையும் சந்திக்க மாட்டேன்,” என்று தெளிவாக பதிலளித்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நட்பு ரீதியாகவே சந்தித்தேன் என தெரிவித்தார். விஜய்க்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, “மக்கள் அவர்மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அவருக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ரசிகர்களும் தொண்டர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகள் நேரடியாக விஜயை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

மேலும், “60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த நேரத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். சமூக ஊடகங்களும் அவருக்கு பெரும் ஆதரவாக உள்ளன,” என்றார். இறுதியாக, “நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்,” என்ற ரஜினிகாந்தின் கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com