

அறிவிக்கப்படாத அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலுக்கு வேட்பாளர் யார் என்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரே நேற்று அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் வேட்பாளராகத் தன்னை அறிவித்தார்.
இன்று பசும்பொன்னில் தேவர் பூஜையில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னைப் பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை. அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால், இந்தப் பேச்சை யார் எடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
தவெக கட்சியினரும், நிர்வாகிகளும்தான் இதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் மட்டுமல்ல, என் கட்சிப் பிள்ளைகள் அனைவரும் பொதுவேட்பாளர்கள்தான். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறேன்."
"அரசியலுக்கு தம்பி (விஜய்) திரையில் இருந்து வந்தார். நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தேன்.
ஒன்றரை விழுக்காடு, இரண்டரை விழுக்காடு ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட்டணி பேசும்போது, எட்டரை விழுக்காடு வைத்திருந்த என்னிடம் கூட்டணி பேசியிருப்பார்களா-இல்லையா? எவ்வளவு கோடிகள் என்னிடம் பேசியிருப்பார்கள். நான் ஏன் சமரசம் செய்யவில்லை? ஏனென்றால், எனக்கு ஒரு இலக்கு இருக்கிறது, நோக்கம் இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
அதே விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவாரா எனக் கேட்கப்பட்டபோது, "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பார்த்துக்கொள்ளலாம்" எனப் பதிலளித்திருக்கிறார்.
இதனால் நாதகவை ஆதரிக்கும் முடிவில் ஸ்டாலின் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பின்னணியில் சில புள்ளிவிவரக் கணக்குகளும் உள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிட்டதால், திமுக, அதிமுக கட்சிகள் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்தன. இவற்றைவிடக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர் சீமான். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் சீமான், சிறுகச் சிறுகச் சேமித்து 2024 தேர்தலில் 8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.
ஆனால், தவெகவின் அரசியல் வருகையால் 2026 தேர்தலில் அது 4 விழுக்காடாகச் சரிந்தது. அப்போதும் சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மாநில சராசரியைவிட அதிக வாக்கு விழுக்காட்டைப் பெற்றிருந்தது நாதக. அதன்படி, அம்பாசமுத்திரம் தொகுதியில் 7.80 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தது நாதக.
சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் 13.4% வாக்குகளைப் பெற்றிருந்தார். இதிலிருந்து, சீமான் வேட்பாளராகப் போட்டியிடும் தொகுதியில் அதிக வாக்குகளைப் பெறுகிறார் என்பதை அறிய முடிகிறது.
திமுக - அதிமுகவின் துணையுடன் பொதுவேட்பாளராக சீமான் களமிறக்கப்படுவாரா என்பது உறுதியாகவில்லை. ஆனால், அப்படி நிறுத்தப்பட்டால் அது மொத்த வாக்குகளையும் இரண்டு துருவங்களாகப் பிரித்து, தவெகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
கடந்த முறை அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 34.30 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இப்போது தவெகவுக்குத் தாவியிருக்கும் அவரே மீண்டும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
திமுக மற்றும் தவெக இடையே வாக்கு வித்தியாசம் 1 விழுக்காடு கூட இல்லை.
இதேப்போல அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் இடைத் தேர்தலில் என்ன நடந்தது என்பதை தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் பார்த்தோம். திமுக ஓரளவு வாக்குகளைத் தக்க வைத்தாலும் அதிமுக ஆதரவு வாக்குகள் பெருமளவில் தவெக பக்கம் சரிந்ததால் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது.
அதுவே அம்பாசமுத்திரத்திலும் மீண்டும் நடந்தால் அது திமுகவை கடுமையாக பாதிக்கும். இதனால் சீமானை வைத்து காய் நகர்த்த ஸ்டாலின் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று அவரது பதிலும் அதையே வெளிப்படுத்தியிருக்கிறது.
கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் எடுத்த வாக்கு விழுக்காட்டை கூட்டினாலே வெற்றி வாய்ப்புக்கான வாக்கு விழுக்காடு கிடைக்கிறது. சீமான் வேட்பாளர் என்பதால் வாக்குகள் அதிகமாகி அதை இன்னும் உறுதிபடுத்தக் கூடும்.
ஆனால் திமுகவின் ஆதரவோடு தேர்தலில் நிற்பது சீமானுக்கு அவரது ஆதரவாளர்களிடம் இருந்தே எதிர்ப்பைக் கொண்டுவரலாம். கடந்த 10 ஆண்டுகளாக திமுக எதிர்ப்பு சீமானின் பிரதான அரசியலாக இருந்தது.
திமுக தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி என்பதை ஆயிரம் முறைக்கும் மேல் கூறியிருப்பார். இதனால் திமுக ஆதரவைப் பெறுவது தீவிர தமிழ்தேசியவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை வரவழைக்கும். சட்டமன்றத்துக்குள் உழையும் அவா இருந்தாலும், அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ரிஸ்கை எடுப்பாரா சீமான் என்பதைப் பொருத்திருந்து தான் காண வேண்டும்.
கடந்த முறை சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அதிமுக. சீமானை MLA ஆக்குவதை விட இழந்த ஒரு இடத்தைப் பெற வேண்டும் என்பதே அவர்களின் குறியாக இருக்கிறது. எனினும் தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சிக்குள் இருக்கும் பிளவுகள் இன்னும் ஆழமாவதைத் தடுக்க முடியாது என்பதால் புதிய முயற்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் கதவை திறந்து வைத்தே காத்திருக்கிறார் எடப்பாடியார்!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.