“விஜய் அண்ணா நீங்க தான் பாத்துக்கணும்” - அதிகரித்த கந்து வட்டி.. அரசுக்கும் குடும்பத்துக்கும் கடிதம் எழுதி தற்கொலை!

கடனுக்கான வட்டி தொகையை இரட்டிப்பாக மாற்றி அதை கட்ட சொல்லி தொல்லை கொடுத்துள்ளனர்
“விஜய் அண்ணா நீங்க தான் பாத்துக்கணும்” - அதிகரித்த கந்து வட்டி.. அரசுக்கும் குடும்பத்துக்கும் கடிதம் எழுதி தற்கொலை!
Admin
Published on
Updated on
2 min read

புதுச்சேரி நெல்லி பகுதியை சேர்ந்தவர் 34 வயதான விக்ரமன். இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் விக்ரமன் டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். வீட்டின் செலவுக்காகவும் தொழில் செய்வதற்காகவும் விக்ரமன் பல்வேறு இடங்களில் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கு தொடர்ந்து விக்ரமன் வட்டி கட்டியும் வந்துள்ளார்.

ஆனால் விக்கிரமனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் விக்ரமனின் காலில் அடிபட்டதால் வேலைக்கு செல்ல முடியாத விக்ரமன் வட்டியை காட்டாமல் இருந்துள்ளார். இந்த சமயத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனுக்கான வட்டி தொகையை இரட்டிப்பாக மாற்றி அதை கட்ட சொல்லி தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் கடனை குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும் என சித்ரவதை செய்துள்ளனர்.

கடன் கொடுத்த சிலர் விக்ரமன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளார். ஏற்கனவே இந்த கடன் பிரச்சனையால் தான் விக்ரமன் தனது சொந்த வீட்டை காலி செய்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அங்கு சென்றும் விக்ரமனை கடன்காரர்கள் தொடர்ந்து தொல்லை செய்துள்ளனர். மேரியையும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த விக்ரமன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார். அதில் அவர் யார் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளார் என்பதையும் விவரமாக எழுதி வைத்துள்ளார். மேலும் தன்னை தரக்குறைவாக பேசியவர்களின் விவரத்தையும் எழுதிவைத்துள்ளார்.

விக்ரமன் விஜய்யின் ரசிகர் என்பதாலும் தவெக உறுப்பினர் என்பதாலும் விஜய்க்கும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் “விஜய் அண்ணா நீங்க ஆட்சிக்கு வந்த இந்த மாதிரி கந்துவட்டியே இருக்க கூடாது, வட்டிக்கு விடவே எல்லாரும் பயப்படனும் , என் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க, என் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் அவர்களது படிப்புக்கு உதவி செய்யுங்கள். உங்களை நம்பி தான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு கடிதத்தில் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடன் தொல்லையால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது, மன உளைச்சல் இருந்தால் அழைக்க வேண்டிய எண்-1800-599-0019.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com