

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ் மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல; அது உயிர் உணர்வு எனக் குறிப்பிட்டார். தாய் எப்படி புனிதமானவரோ, அதேபோல் தமிழ் மொழியும் புனிதமானது என்றும் அவர் தெரிவித்தார்.
“தாயை போற்றுகிற தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட்டுவிடும்?” என்று முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர், தமிழ் என்றால் உயிர், தமிழ் என்றால் உணர்வு” என தமிழ் மொழியின் சிறப்பை அவர் குறிப்பிட்டார். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் உள்ளிட்டவற்றின் மீது தமிழர்கள் கொண்டுள்ள பெருமையையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இவற்றின் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒட்டுமொத்த இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பேசும் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது எந்தவொரு அரசியலுக்கும் எதிரானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு எந்த சமரசமும் செய்யாது என்றும் முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக கூறினார். இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான இந்தத் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ்த்தாய் பாடலை அரசு அலுவலகத்தில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். மனோன்மணீயம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்திற்கு சென்ற நேரத்தில்தான் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.” தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை ஆதரித்து திமுக எம்.எல்.ஏ. கோவி.செழியன் பேச்சு.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல; தேசப்பற்றும் “மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல” என்றும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் சட்டமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் “முதல்வர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் எட்டரை கோடி மக்களால் ஏற்கப்பட்டுள்ளது” என்றும் “காங்கிரஸ் கட்சி இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு தருவதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்