

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடிய நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேளாண் பட்ஜெட் தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார். அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “மாற்றம், மாற்றம் என்று கூறினார்கள். விவசாயிகளுக்கு மாற்றம் வரும் என்று நினைத்தோம். ஆனால் மாற்றத்தையே காணோம்… ஏமாற்றம்தான் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை குறுவை சாகுபடி நிவாரணத் தொகுப்பு தொடர்பாக ஆளுங்கட்சியினர் தெரிவித்த கருத்துகளுக்கும் அவர் பதிலளித்தார். “இது எப்படி அவர்களுக்கு தெரியாமல் போனது என்று தெரியவில்லை. முன்பு எப்போதாவது செய்தித்தாள் படித்திருந்தால் இது அவர்களுக்கு தெரிந்திருக்கும்” என்று எதிர்க்கட்சியினரை விமர்சித்ததாக கூறப்பட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது கருத்துகளை முன்வைத்தார்.
தொடர்ந்து, “திராவிட கழகம் கொள்கையைப் பேசி வளர்ந்த இயக்கம், கொள்கையைப் பேசி ஆட்சியைப் பிடித்த கழகம்” என்று குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றிய விதம் குறித்தும் அவர் பேசினார். “நாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது காலையில் பதற்றமாக இருக்கும். காலையில் செய்தித்தாளைப் படித்துவிட்டு, அந்தந்த துறை அமைச்சர்களுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து கால் வந்துவிடும். எங்களுக்கு மட்டும் இல்லை, கலெக்டர்களுக்கும் கூட கால் வரும்” என்று தெரிவித்தார்.
இதனால் தங்களது ஐந்து ஆண்டு ஆட்சிக் காலமும் பதற்றத்துடனேயே சென்றதாக கூறிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சியினர் மிகவும் ரிலாக்ஸாக இருப்பதாக விமர்சித்தார். “நாங்கள் டென்ஷனாக இருந்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். அதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் என்.ஆனந்த், “காலையில் கூட எங்கள் முதல்வர் போன் செய்து கால்வாய் பிரச்சினை குறித்து பேசினார். நீங்களாவது 5 வருஷம் டென்ஷன்… ஆனால் எங்களுக்கு தினம் தினம் டென்ஷன்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இதனால் முதலமைச்சர் விஜய், சபாநாயகர் மற்றும் அவையில் இருந்த உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடந்த ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், விவசாயிகள் போராட்டமே இல்லாத ஆட்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “போன ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி, அவர்கள் மீது குண்டாஸ் போட்டதே உங்கள் அரசுதான்” என்று பதிலடி கொடுத்தார். இதனால் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்