“TET-ல் இருந்து நிரந்தர விலக்கு” - மூத்த ஆசிரியர்களுக்கு தேர்வு வேண்டாம்.. சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, மனு அளித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு...
TET Resolution
TET Resolution
Published on
Updated on
1 min read

சென்னை சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக, 2010ஆம் ஆண்டு (ஆகஸ்ட் 23) ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. தீர்மானத்தை முன்வைத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கட்டாய TET தேர்ச்சி விதியால் 3.28 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பணியில் சேர்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால், ஏற்கெனவே பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களுக்கு புதிய தேர்வு நிபந்தனையை கட்டாயப்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். மேலும், TET தேர்வில் இருந்து விலக்கு கோரி மூத்த ஆசிரியர்கள் நீண்டகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, மனு அளித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதுடன், தங்களது பணிக்காலம், அனுபவம் மற்றும் ஏற்கெனவே பெற்றுள்ள கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு புதிய தேர்வு நிபந்தனையை கட்டாயப்படுத்துவது நியாயமற்றது எனக் கூறிய அமைச்சர், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அரசின் தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com