
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த டிவி நடிகர் ரவிச்சந்திரன் என்பவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது போன்று வெளியான வீடியோ ஒன்று தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி, நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது முருகன் மாநாடு குறித்த கேள்விகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்திருந்தார். அதனை எதிர்த்து யூடியூப் சேனலில் பேசிய நடிகர் ரவிச்சந்திரன், செல்வப்பெருந்தகையை மிக கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேட்டி வெளியிடப்பட்ட காணொளி வைரலானதை அடுத்து, இது செல்வப்பெருந்தகையை மனதளவில் காயப்படுத்தும் வகையில் உள்ளது என அலிம் அல் புஹாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அந்த காணொளியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், நடிகர் ரவிச்சந்திரன் மீது IPC, BNS, IT Act பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்ய வேண்டும் எனவும், இது குறித்து வீடியோ மற்றும் பேட்டி போன்ற சமூக ஊடக ஆதாரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறு, வெறுப்புரை வெளியிடாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.