தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான அரசின் முடிவு, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்
சிலிண்டர் விலை உயர்வை கருத்தில் கொண்டு, ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக பெண்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்தத் திட்டம் 2027 பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும், சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். சிறு, குறு வியாபாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் திட்டத்தில் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி பேர் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும்
சட்டப்பேரவையில் மற்றொரு முக்கிய அறிவிப்பாக, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்த அவர், விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையில் புதிய இடம் குறித்து ஆய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் விரிவாக்கம்
இதனிடையே, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப்பயணம்’ திட்டம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்தார். இதன்படி மாநகர மற்றும் நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு வருமான உச்சவரம்பு எதுவும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஒரே நாளில் பெண்கள் நலன், விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்