"கூட்டணிக்கே மரியாதை இல்ல; கொள்கை தெளிவில்லாத தவெக" - இ.பி.எஸ். - விஜய் கூட்டணிக்கு வாய்ப்பா? - புட்டு புட்டு வைக்கும் சையத் அலீம்!

கொள்கை தலைவர் என சொல்லும் பெரியாரை பற்றி முருகன் மாநாட்டில் தவறான காணொளி ஒளிப்பரப்பப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக முறையான ஒரு கருத்தை வைக்கவில்லை
"கூட்டணிக்கே மரியாதை இல்ல; கொள்கை தெளிவில்லாத தவெக" - இ.பி.எஸ். - விஜய் கூட்டணிக்கு வாய்ப்பா? - புட்டு புட்டு வைக்கும் சையத் அலீம்!
Published on
Updated on
3 min read

சமீபத்தில் "அதிமுக-தவெக உடன் கூட்டணி அமைக்குமா?" என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, "கட்சியின் சார்பாக தனிப்பட்ட முறையில் பேசி எடுக்க வேண்டிய முடிவுகளை பொது வெளியில் அறிவிக்க முடியாது" என தெரிவித்திருந்தார். மேலும் தற்போது வரை தவெக தலைவர் விஜய் கூட்டணி குறித்து எந்த முடிவுகளையும் அறிவிக்காமல் உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும் அதிமுக மற்றும் தவெக கூட்டணி குறித்தும் பேசியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி பொதுச் செயலாளர் சையத் அலிம் “ சமீபத்தில் விஜய் உடனான கூட்டணி குறித்தும் பாஜவுடனான கூட்டணி நீடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பழனிச்சாமி நாங்கள் அந்தரங்கமாக பேசி முடிவு எடுக்க வேண்டியதை, மீடியா முன்பு சொல்ல முடியாது என சொல்வதையும், விஜய் தரப்பில் இருந்தும் கூட்டணிக்கான எந்த ஒரு முடிவும் செய்யப்படாததையும் பார்த்தால் இருவருமே கூட்டணிக்கான கதவுகளை திறந்து தான் வைத்திருக்கிறார்களோ என்ற ஒரு ஐயப்பாடு ஏற்படுகிறது.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய, உண்மை என்னவென்றால் இவர்களால் கூட்டணிக்கான மரியாதையே போய்விட்டது. ஏனென்றால் திமுக தலைமையிலான, இங்குள்ள கூட்டணியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி "இலவு காத்த கிளி போல, இந்த கூட்டணி கலையும் கலையும்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு ஏற்றார் போல கம்யூனிஸ்ட் கட்சி செய்த போராட்டங்கள், திருமாவளவன் எழுப்பிய கேள்விகள் மற்றும் போராட்டங்கள் இவற்றை வைத்துக் கொண்டு, கூட்டணியில் உறுதியில்லை என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை" ஆனால் தாற்காலிகத்தில் கூட ஒரு நியாயம் இருந்தது. கடந்த கால கட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது, அதில் கொள்கை ரீதியான ஒரு உடன்பாடு இருந்தது. கூட்டணி என்பது கொள்கை ரீதியாக அமைந்து பின்னர் கருத்து முரண்பாடுகள் இருந்தால் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலை மாறியுள்ளது. இதை கடந்த காலங்களில் கேலிக்கூத்து ஆக்கியது பிரேமலதா அவர்கள், நாங்கள் அவர்களிடமும் பேசுகிறோம், இவர்களிடமும் பேசுகிறோம் என வெளிப்படையாக பேசி இருந்தார்.

தற்காலிக கூட்டணியை கூட நிர்ணயிக்க முடியாமல் இவர்கள் கூட்டணியை கேலிக்கூத்து செய்திருக்கிறார்கள். எங்கள் கட்சி தலைவரை எடுத்துக்கொள்ளுங்கள் சென்னை வந்து பேசிய போது அரசியல் ரீதியாக "நான் யாரையும் அண்ணன் என சொல்லியது இல்லை ஆனால், ஸ்டாலின் அவர்களை நான் அண்ணன் என்று அழைக்கிறேன்" என தெரிவித்திருந்தார். இதில் ஒரு கருத்தியலும் கொள்கையும் இருக்கிறது. ராகுல் காந்தி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் போது கூட “he could never ever rule the people of tamil nadu” என தெரிவித்திருந்தார். காரணம் தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையும் கொள்கையும் அவ்வாறு இருக்கிறது. இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் கூட்டணி என்பது கொள்கையின் அடிப்படையிலும் சிந்தனையின் அடிப்படையில் அமைகிறது.

தற்போது நடந்த காமராஜர் சர்ச்சையை உதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட திருச்சி சிவா அவர்கள் பேசிய கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். இதனை மிக சிறப்பாக கையாண்ட முதலமைச்சர் ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதே போல திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என நினைத்துக்கொண்டு சிலர் காமராஜரின் கண்ணியத்தை இழிவு படுத்தினார்கள். இந்த சூழலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் எப்படி கையாண்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். இது தான் ஒரு நல்ல கூட்டணி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம்.

இப்போது இதற்கு நேர்மறையாக விஜய் அவர்களுடைய கருத்தை பார்த்தால், கொள்கை தலைவர் என சொல்லும் பெரியாரை பற்றி முருகன் மாநாட்டில் தவறான காணொளி ஒளிப்பரப்பப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக முறையான ஒரு கருத்தை வைக்கவில்லை. இது போல பாஜக நிர்வாகிகள் இருக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடியை பற்றி அல்லது மற்ற பாஜக தலைவர்கள் பற்றியோ காணொளி வெளியிடப்பட்டிருந்தால், பாஜக அதிமுகவுடன் கூட்டணியை தொடர்ந்து இருக்குமா? அப்போது, பெரியார் அவர்களை பற்றி அவதூறாக பேசியவர்களை எதிர்த்து கேள்வி கேட்காத அதிமுகவுடன் நீங்கள் கூட்டணி வைக்க போகிறீர்களா? எனேவ எந்த உறுதியும் இல்லாத பழனிசாமியுடன் விஜய் கூட்டணி வைக்கப் போகிறாரா என்பதை முதலில் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.

இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வது போல தற்போது நடந்து கொள்வது, இவர்கள், கொள்கையில் நிலைப்பாடு இல்லாதவர்கள் என்பதையும், தங்களின் கொள்கையில் தெளிவில்லாதவர்கள் என்பதையும் காட்டுகிறது. எனவே கொள்கை தெளிவு உள்ளவர்களை தான் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியர்கள் 63% கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள் என குறிப்பிடப்படிருந்தது. இருப்பினும் மதவாத சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் அனுமதித்ததில்லை காரணம் கொள்கையில் தெளிவானவர்கள். எனவே திமுக தலைமையிலான கூட்டணியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் அதிமுகவை புறக்கணிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com