“எனது Reels-யை பயங்கரமாக கலாய்த்தார்கள்” - கேலிகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கீர்த்தனா! முதலீட்டுக்கான வாய்ப்புகள் பறிபோனதா?

லஞ்சத்தால் 3.3 லட்சம் கோடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் பறிபோனதாகவும்
minister keerthana
Published on
Updated on
2 min read

சிவகாசியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பங்கேற்று பேசியிருந்தார். அதில் “40, 50 ஆண்டுகள் ஆண்டுகொண்டிருந்த  கட்சிகள் 30- நாட்கள் ஆண்டு கொண்டிருக்கும் நம்மைக் கேள்வி கேட்கிறார்கள்” என்றும் “ஜீரோ கரெப்சன் மாடல் கொண்டு வந்த எங்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறீர்களா? என்றும் திராவிட கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

ரீலிஸ் ஆட்சி குறித்த விமர்சனத்திற்கு, “ரீல்ஸ் ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என்கிறார்கள். முதலீடு குறித்து நான் வெளியிட்ட ரீல்சை பயங்கரமாக கலாய்த்தார்கள். முதலீட்டை ஈர்க்க போவதாக மக்கள் வரி பணத்தில் சொகுசாக நீங்கள் குடும்பம்- குடும்பமாக வெளிநாட்டுப் பயணம் செய்தீர்களே! அப்பொழுது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்றும் “இன்றைக்கு நாங்கள் ரீல்ஸ் மூலமாக நிறுவனங்கள் கொண்டு வரவில்லை என்றாலும், எத்தனை இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்து டிக்கெட் புக் செய்து வந்து விஜய்யை எப்படியாவது முதல்வராக்க வேண்டும் என வாக்களித்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து விஜய்க்கு வாக்களித்துவிட்டு சென்றவர்கள் பணியாற்றும்  அலுவலக முதன்மை அதிகாரிகளிடம் இப்படி ஆட்சி நடக்கிறது இப்படி ஒரு தொழில் துறை அமைச்சர் இருக்கிறார். நாமும் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வோம் என சொல்லும் நிலைமை உள்ளதாக தெரிவித்தார். திமுக 5- ஆண்டு ஆட்சியில் இருந்த காலத்தில் 25- நிறுவனங்கள் தமிழகத்திலிருந்து கைவிட்டுச் சென்றதாகவும், இதனால் 2- லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்தார். முதலீடு செய்ய வரும் தொழில் நிறுவனங்களிடம் அவர்கள் கேட்ட லஞ்சத்தால் 3.3 லட்சம் கோடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் பறிபோனதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை மேயர் என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பில் இருந்தவர்கள் காரை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வதும், மற்றவருக்கு குடையைப் பிடிப்பதும், பவர் என்றால் என்ன எனத் தெரியாமல் எதையெதையோ கத்திக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்கள் என சென்னை மேயர் பிரியாவிற்கு பதிலடி கொடுத்தார். தன் மீதான விமர்சனம், உருவ கேலியை விட்டுவிட்டு கொள்கை ரீதியாக என் பக்கத்தில் இருந்து என்னிடம் பேச முடியுமா? என சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா “பெண்கள் முன்னேற்றம் என ஆட்சியிலிருந்த கட்சிகள் 70- ஆண்டுகளாக ஏமாற்றம் மட்டும் தான் செய்தார்கள். இதுவரை எத்தனை பேரை அமைச்சராக்கினார்கள். ஆனால் இன்றைக்கு முதல்வர் விஜய் நான்கு பெண் அமைச்சர்களை அமர வைத்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின் சட்டமன்றத்தில்  பெண் தலைமைச் செயலாளரை அமர வைத்துள்ளார். பெண்கள் முன்னேற்றம் என்பது வெட்டிப் பேச்சாகவே பயன்படுத்தியுள்ளார்கள். தமிழக வெற்றிக் கழக  ஆட்சியில் தான் அதை செய்து காட்டியுள்ளோம்” என்றும் குறிப்பிட்டார். 

பெண்கள் முன்னேற்றம் என கூறும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் உங்கள் வீட்டிலுள்ள உங்கள் தங்கையவே முடக்குவதற்கு டெல்லியில் அமர வைத்தீர்கள். தமிழக ஆட்சியில் அவருக்கு என்றைக்காவது  பவர் கொடுத்தீர்களா? அதை தடுத்து நிறுத்துவதற்கு உங்கள் வீட்டில் உள்ள பெண்மணிக்கே  அவ்வளவு தொந்தரவு கொடுத்துள்ளீர்கள். திமுகவில் உள்ள அத்தனை பெண்களும் அதனைப் பார்த்து உங்களுக்கு எங்கு மரியாதை கொடுக்கிறார்களோ அங்கு வந்து சேருங்கள். சமவாய்ப்பு என்று சொல்லி திமுகவினர் ஏமாற்றி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சியை அமைத்துக் கொண்டு 30- நாட்களில் அத்தனை சாதனை படைத்துள்ள தலைவரை நீங்கள் கேள்வி கேட்பீர்களா? பெண்கள் பாதுகாப்பில் துரிதமாக செயல்படும் எங்களைப் பார்த்து நீங்கள் கேள்வி கேட்பதா? பெண் சட்டமன்ற உறுப்பினர் தனது குழந்தையுடன்  சட்டமன்றத்திற்கு வந்தால் என்ன தவறு. இதை வைத்தும் இழிவான அரசியல் செய்கிறது திமுக” என்று சட்டமன்ற உறுப்பினர் பல்லவி குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com