இது இலவசம் இல்லை..சமூக முதலீடு! - பெண்களை அடுப்படியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும்... பொள்ளாச்சி சம்பவம் நினைவிருக்கிறதா..?

கிட்டத்தட்ட 80,000 கருத்துக்களை பெற்று இந்த தேர்தல் அறிக்கை குழு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறது..
kanimozhi
Published on
Updated on
3 min read

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இன்று (30ம் தேதி) அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கனிமொழி. அங்கு அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் அவர், குறிப்பிட்டு கூறிய தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் போன்ற திட்டங்களாக இருக்கட்டும். மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கம், தாயுமானவர் திட்டம், மாற்று திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், அன்புக்கரங்கள், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரை பதிவு குறைக்கப்படுகிறது போன்ற எத்தனையோ தேர்தல் வாக்குறுதிகளில் தராத பலவற்றை திமுக செயல்படுத்தி தந்திருக்கிறது. இந்த ஆண்டு வரவிருக்கின்ற சட்ட மன்ற தேர்தலுக்கான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் அறிக்கையை நேற்று (29ம் தேதி) முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டக்கூடிய ஒரு தேர்தல் அறிக்கையாக இது இருந்திருக்கிறது. தேர்தல் அறிக்கை குழு, பல மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், எஐ (AI) தளம் மூலம் பெறப்பட்ட மனுக்கள், இ-மெயில், வாட்ஸ்ஆப் மூலமாக பெறப்பட்ட தகவல்கள் கோரிக்கைகள் போன்றவற்றின் மூலம் கிட்டத்தட்ட 80,000 கருத்துக்களை பெற்று இந்த தேர்தல் அறிக்கை குழு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு துறைகளிலும் உள்ள வல்லுநர்களோடு கலந்தாலோசித்து இந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கைகளை நிறைவேற்ற கூடிய சாத்திய கூறுகள் என்னென்ன? என்று அவற்றையும் ஆராய்ந்து இந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளாக இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கு கூறியிருந்தார். அதன்படி தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைதான் இந்த தேர்தல் அறிக்கை.

இதனையடுத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை 'காப்பி' அடித்து உருவாக்கப்படுள்ளது என்று கூறுகிறார்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கனிமொழி, "அதிமுகவினருடைய தேர்தல் அறிக்கையை படிக்கவோ அல்லது பார்க்கவோ எங்களுக்கு உண்மையாகவே நேரம் இல்லை. அதனை யாரும் படித்ததாகவும் நாங்கள் கேள்விப்படவில்லை, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் பொருட்படுத்துவதும் இல்லை. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் கூறும் பல விஷயங்களை நிறைவேற்றுவதே கிடையாது. 'திராவிட மாடல்' அரசு நடைமுறைப்படுத்தியுள்ளவற்றை கூட பார்க்காமல் வெளியிருக்கிறார்கள். ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகையாக திமுக வழங்கிவரும் ரூ.1000 நாங்கள் 2000 ரூபாயாக தருவோம் என்று திமுக அறிவித்த பின்பு அதை எழுதி வைத்து விட்டு அதிமுக நாங்கள் 2000 ரூபாய் தருவோம் என்று இவர்கள் எங்களை 'காப்பி' அடிக்கிறார்கள் என்று கூறுவது வைகையாகத்தான் இருக்கிறது. 505 தேர்தல் வாக்குறுதிகளில் நாங்கள் 404 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதிமுகவினரின் தேர்தல் வாக்குறுதி பட்டியலை எடுத்து செயல்படுத்தப்பட்டுள்ள அறிக்கைகள் என்ன என்ன? என்று பார்த்தல் அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

பலரும் இலவசங்கள் என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு அதைவைத்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். உலகளவில் உள்ள புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் பலரும், ஏன்? நமது முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் உட்பட பலரும் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற ஒரு தூண்டுதல் இருப்பது முக்கியம் என்று கூறியிருக்கிறார்கள். மக்களும் கையில் பணம் சேரும் போதுதான் அங்கிருக்கும் பொருளாதாரம் வளர்ச்சியடையும். நுகர்வு திறன் அதிகப்படும் போதுதான் பொருளாதாரம் வளர்ச்சியடையும். அதனால்தான் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இந்த மகளிர் உரிமைத்தொகை என்பது அவர்களின் நுகர்வுத்திறனை அதிகப்படுத்தும். சுற்றி இருக்கக்கூடிய பொருளாதாரம் இதனால் வளர்ச்சியடையும். இதன் மூலமாக, அவர்கள் தங்களுக்கென்ற ஒரு பிசினஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றினை அவர்கள் செய்துகொள்வார்கள். இவ்வாறு பெண்கள் தங்களால் இயன்ற ஒன்றினை செய்யும் போது இது ஒரு தூண்டுதலாகத்தான் இருக்குமே தவிர்த்து, இது வேறும் இலவசம் என்று ஆகாது.

மகளிர் விடியல் பேருந்து பயணத்தை எடுத்துக்கொண்டாலும் சரி, ஒரு பெண்ணின் கணவன், குழந்தைகள் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் சென்ற பிறகு வேறு எங்கேனும் சென்று வேலை செய்து வர அவர்களுக்கு இந்த விலையில்லா விடியல் பேருந்து உதவியாக இருக்கும். முன்பு பேருந்திற்கு பணம் செலவழிக்க வேண்டும் என்று அவர்கள் வெளியில் செல்லாமல் இருந்தனர், இப்பொது அப்படி இல்லை. இந்த விடியல் பேருந்து திட்டத்தின் மூலம், அப்பெண்ணால் ஒரு 5000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் அது எப்படி இலவசமாக இருக்கும்?. அது ஒரு சமூக முதலீடு. சமூக நீதி வரக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் இதனை விமர்சம் செய்வார்கள், என்று கனிமொழி கூறினார்.

பெண்களுக்கு நலத்திட்டங்கள் செய்தாலும், பாதுகாப்பில்லையே என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு கனிமொழி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையின் போது அந்த வழக்கை 'FIR' கூட பதிவு செய்யாதது யாருடைய ஆட்சியில்? அந்த குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளையும் செய்தது யாருடைய ஆட்சி? என்று கேள்விகளை எழுப்பினார். ஆனால் திமுக ஆட்சியில் முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் உறுதிசெய்திருக்கிறார். அதனால் அதிமுகவினர்க்கு திமுகவை விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை. இந்த தேர்தல் அறிக்கையிலும் கூட பெண்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை தந்திருப்பதாக அவர் கூறினார். சமூகத்தில் பின்தங்கியவர்களாக இருக்கின்ற, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு உள்ளாட்சியில் வாய்ப்புகள் வழங்கி இருக்கக்கூடிய ஆட்சிதான் நமது திராவிட மாடல் ஆட்சி. மேலும், சுயஉதவி குழுக்களில் உள்ள பெண்கள் தாங்கள் சுயமாக தொழில் தொடங்க விரும்பினால் அதற்கு மானியத்துடன் கூடிய கடனும் வழங்கியிருக்கிறோம் என்று கனிமொழி கூறினார்.

புதுமை பெண்கள் திட்டம், மாதம் 2000 ரூபாய் போன்றவையை காட்டிலும், இந்த 'கூப்பன்' கொடுக்கும் திட்டம் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கலைஞர் ஆட்சியை உதாரணமாக காட்டினார். அதாவது, கலைஞர் ஆட்சியில், பெண்களுக்கு கேஸ் அடுப்பு தருவதாக இருந்தபோது அதிகாரிகள் அவரிடம். "நீங்கள் எத்தனை பர்னர் என்று குறிப்பிடவில்லை, எனவே ஒரு பர்னர் உள்ள அடுப்பு கொடுத்தால் நமக்கு செலவு குறையும்" என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் கலைஞர், இதை நான் வாக்குறுதியாக கொடுக்கவில்லை, பெண்கள் சீக்கிரமாக வேலையை முடித்தால் அடுப்படியை விட்டு வெளியில் வந்து விடுவார்கள். அவர்களை சமயலறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள்தான் இவை. அதேபோலத்தான் இதுவும், வாஷிங் மிஷின் மூலம் சீக்கிரம் தங்களது வேலைகளை முடித்து விட்டு தங்களுக்கென்று வேறு வேலையை அவர்கள் பார்க்கமுடியும் அதே போலத்தான் ஃபிரிட்ச்சும், சமையலை செய்து வைத்து விட்டு தங்களுக்கென்று வேறு வேலைகளை அவர்கள் செய்யமுடியும். பெண்களுடைய வேலைச்சுமையை குறைப்பதற்கு எது தேவையோ அதனை பெண்கள் வாங்கிக்கொள்ளும் நிலைக்கு வருவர் என்று கனிமொழி கூறினார்.

இந்த 2000 ரூபாய் பணம் ஒரு பெண்ணின் கைக்கு சென்றால் அது அவளுடைய பணம். அவள் யாருக்காகவும், எதற்காகவும் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படாது. அப்பணம் அவர்களை பார்த்துக்கொள்ளவோ, வேறு எதிலும் முதலீடு செய்யவோ அவர்களது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளவோ பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் இது இலவசம் இல்லை, சமூக முதலீடு என கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com