“ஒருமனதாக நிறைவேறியது நீட் ரத்து தீர்மானம்” - கட்சிகளுக்கு இடையே நடந்த அனல் பறக்கும் விவாதம்.. வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏ!

எம்.எல்.ஏ. ஆர்.செல்லசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்...
“ஒருமனதாக நிறைவேறியது நீட் ரத்து தீர்மானம்” - கட்சிகளுக்கு இடையே நடந்த அனல் பறக்கும் விவாதம்.. வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏ!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்து, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது கட்சிகளின் சார்பில் விவாதம் நடைபெற்றது.

முதலில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து பேசிய பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, மஜக எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, திமுக எம்.எல்.ஏ. முத்துராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆர்.செல்லசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக தொடர்ந்து உறுதியாக இருந்து வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தற்போது தவெக அரசு கொண்டு வந்துள்ள நீட் எதிர்ப்பு தீர்மானத்தையும் அதிமுக ஆதரிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், நீட் தேர்வு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துள்ளதாக விமர்சித்தனர். குறிப்பாக, தனியார் பயிற்சி மையங்களையே நீட் தேர்வு நடைமுறை அதிகம் பயனடையச் செய்வதாகவும், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறுவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தனர்.

“சமூக நீதியை பாதிக்கும், சம வாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது” என்ற கருத்தும் விவாதத்தில் முன்வைக்கப்பட்டது. இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்து மருத்துவக் கல்வியை பணம் உள்ளவர்களுக்கான வாய்ப்பாக மாற்றிவிடக் கூடாது என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரக்கூடிய நிலை உருவாகாமல், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், சட்டப்பேரவையின் ஒருமித்த குரலை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றும், மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சித் தத்துவம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த உறுப்பினரும் வாக்களிக்காத நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com