

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்த திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று புனித ஜோசேப் கல்லூரியில் நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசேப் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார் விஜய். இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பின்பு திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று விழாவில் பேசிய விஜய் “வரப்போகும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் இருந்து வரும் ஒருவரைத்தான் நிற்க வைப்பேன், அவரை வெற்றி பெற செய்யுங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
விழாவின் தொடக்கத்தில் பேசிய தமிழக ஊரக மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் திருச்சி மக்கள் மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இங்கு நான் அமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் இல்லை” என்றும் “முழுக்க முழுக்க 234 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்க்காகவே வாக்கு செலுத்தியுள்ளார்கள்” என்றும் தெரிவித்தார். “வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே கடமையாக இருக்க வேண்டுமே தவிர தவறு செய்யக்கூடாது” என்று முதல்வர் விஜய் கூறியதாக குறிப்பிட்டார். “தலைவனாக இருக்கலாம், சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் கடைசி காலம் வரைக்கும் தளபதியின் தொண்டனாக இருக்க ஆசை” என்றும் புஸ்ஸி ஆனந்த் பேசினார். இறுதியாக வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி கூறி விடை பெற்றார்.
இவரை அடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் கு. ப. கிருஷ்ணன் “தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, மக்கள் விரும்பும் முதலமைச்சராக வந்திருக்கிறீர்கள்” என்று முதலமைச்சர் விஜயை வாழ்த்தினார். மேலும் 90 ஆண்டுகால அரசியல் கட்சிகளையும், வைரவிழா கண்ட அரசியல் கட்சிகளையும், வெள்ளி விழா கண்ட அரசியல் கட்சிகளையும் துணிவாக முதலமைச்சர் வென்று வந்ததாக அவர் புகழாரம் சூட்டினார். கு. ப. கிருஷ்ணன், இதற்கு முன் அதிமுகவில் அங்கம் வகித்து பின் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பிரிந்து தமிழர் பூமி எனும் கட்சியை தொடிங்கினார். பின்னர் திமுக கூட்டணியில் பங்கேற்றார். மீண்டும் அதிமுகவில் இணைந்த கு. ப. கிருஷ்ணன் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு தேர்வு தெரிவித்து வெளியேறினார். தற்போது தவெக-வில் இணைந்து பயணிக்கிறார்.
அதைதொடர்ந்து பேசிய, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேடையேறியதும், அனைவரையும் வாழ்த்திய பின்பு, இந்த ஒரு நொடிக்காக எனது வாழ்க்கையில் பல ஆண்டுகள் காத்திருந்ததாகவும் இன்று அது நிறைவேறியுள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். முதலமைச்சர் என்று தளபதி விஜயை அழைக்க மக்கள் உட்பட அவரும் தவமிருந்ததாக கூறினார். மேலும், நீதி நெறி தவறாத ஆட்சியாளனை மக்கள் இறைவனாக கொண்டாடுவார்கள் என்றும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். திருச்சியை கோட்டை கோட்டை என்று பேசியவர்களுக்கு அதுகெல்லாம் வெறும் மனக்கோட்டை தான் என்று முதலமைச்சர் கட்டியதாக, திமுகவை மறைமுகமாக விமரிசித்தார் ரமேஷ். மேலும், “இந்த மலைக்கோட்டை மாநகரை தளபதியின் கோட்டையாக மாற்றியுள்ளனர் மக்கள்” என்று பேசினார். அதையடுத்து சாதாரண மக்களையும், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களையும் தேர்தலில் போட்டியிட செய்து, இவர்கள் எல்லாம் நம்மை எதிர்த்து வெற்றி பெற முடியுமா என்று கூறிய நிலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெறுபவர்களே ஆட்சியமைப்பார்கள் அது செண்டிமெண்ட் என்று கூறினார்கள். ஆனால் இந்த சாமானியனை தேர்தலில் வெற்றி பெற செய்து அமைச்சராகியுள்ளார் முதல்வர் விஜய்” என்று புகழாரம் சூடினார் அமைச்சர் ரமேஷ். மேலும் “சின்ன பசங்க என்று ஏளனமாக பேசாதீர்கள், ஏனெனில் இந்த சின்ன பசங்க வரும் காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத முதலமைச்சராக அமர வைப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்து முதலமைச்சருக்கு நன்றி கூறி சென்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.