“அரிசி முதல் சர்க்கரை வரை கிடுகிடு விலை உயர்வு” - சட்டப்பேரவையில் உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு!

2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சிறப்பு பொது விநியோகத் திட்டம் தற்போது வரை செயல்பாட்டில்...
Udhayanidhi Stalin Price Rise
Udhayanidhi Stalin Price Rise
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் உள்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து மற்றும் வீட்டு வசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார். அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மே மாதத்தில் கிலோ ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்ட அரிசி தற்போது ரூ.75 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல், துவரம் பருப்பு ரூ.150-ல் இருந்து ரூ.180 ஆகவும், சர்க்கரை ரூ.40-ல் இருந்து ரூ.70 வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகைப் பொருட்களை வாங்குவதற்கே மக்கள் தயக்கம் காட்டும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரே விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தினார். கடந்த 2007-ம் ஆண்டு நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய், ரவை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்கப்பட்டதாகவும், கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் ரூ.50-க்கு வழங்கப்பட்டதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சிறப்பு பொது விநியோகத் திட்டம் தற்போது வரை செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் அளவை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி கோரிக்கை விடுத்தார். மேலும், முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com