"9 பிரிவுகளில் வழக்கு பதிவு.. உதயநிதி ஸ்டாலினின் இரட்டை அர்த்தப் பேச்சின் எதிரொலி!" சலசலக்கும் அரசியல் வட்டாரம்

6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 9 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Udhayanidhi Stalin arrest
Udhayanidhi Stalin arrest
Published on
Updated on
2 min read

தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக நடிகை குறித்து பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கிட்டத்தட்ட 9 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த தவெக மகளிர் அணி தலைவி, பைரவி தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை (04/08/26) காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், இவரது பேச்சிற்கு வைகோ, அமைச்சர் கீர்த்தனா, ஆதவ் அர்ஜுனா, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை பிற்பகல் வரை கைது செய்யப்படக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறிய நிலையில் விசாரணைக்காக அவர் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த 9 வழக்குகளில், 1. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 196 - மதம், இனம், பிறந்த இடம், மொழி அல்லது சாதியின் அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையே பகைமை, வெறுப்பு அல்லது விரோதத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டிக்கும் சட்டப்பிரிவு.

2. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 192 - கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது கலவரம் விளையும் என்று தெரிந்தே ஆத்திரமூட்டும் வகையில் சட்டவிரோதமாகச் செயல்படுவதைக் குறிக்கும் குற்றம்.

3. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 352 - பொது அமைதியை சீர்குலைக்கும் அல்லது சமாதானத்தை மீறச் செய்யும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றொருவரை அவமதிப்பது.

4. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 79 - பெண்களின் கண்ணியத்திற்கு அவமரியாதை விளைவிக்கும் வார்த்தைகள், சைகைகள், செயல்கள் அல்லது ஒரு பெண்ணின் தனியுரிமைக்குள் அத்துமீறி நுழைவதைக் குற்றமாக்கும் ஒரு முக்கியமான சட்டப் பிரிவு.

5. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 296 (b) - பொது இடங்களில் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் நடந்து கொள்வது.

6. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 61 - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஒரு சட்டவிரோத செயலைச் செய்ய திட்டமிடுதல் அல்லது ஒப்பந்தம் செய்துகொள்ளுதல்.

7. பாரதிய நியாய சன்ஹிதா 2023, பிரிவு 351 (2) - கிரிமினல் மிரட்டல்.

8. தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு (திருத்த) சட்டம் (2002) பிரிவு 4 - பொது இடங்களில் பெண்களைத் துன்புறுத்தல்.

9. தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 (IT Act 2000) பிரிவு 67 - இணையம் அல்லது மின்னணு ஊடகம் மூலம் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.

போன்ற 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com