“வடக்கில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா?” - தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் வன்னிஅரசு சரமாரி கேள்வி!

தெற்கில் இருப்பவர்கள் மூன்றாம் தர மக்களா?” என பெரியார் கேள்வி எழுப்பியதையும் அவர் குறிப்பிட்டார்...
vanni arasu
vanni arasu
Published on
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசிய அமைச்சர் வன்னிஅரசு, முதல்வர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்பதாகவும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் பேசிய வன்னிஅரசு, “முதல்வர் அறிவித்துள்ள தனித்துவமான, மகத்துவமான தீர்மானத்தை விசிக வரவேற்கிறது” என்றார். தொடர்ந்து, வடக்கு - தெற்கு இடையேயான அரசியல் மற்றும் சமூக சமத்துவம் குறித்து பெரியார், அண்ணா மற்றும் அம்பேத்கர் முன்வைத்த கருத்துகளை அவர் சுட்டிக்காட்டினார். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என அண்ணா கூறியதையும், “வடக்கில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா? தெற்கில் இருப்பவர்கள் மூன்றாம் தர மக்களா?” என பெரியார் கேள்வி எழுப்பியதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் வாழும் மக்கள் முற்போக்கானவர்கள், நாகரீகமானவர்கள் என அண்ணல் அம்பேத்கர் கூறியிருப்பதாகவும் வன்னிஅரசு தெரிவித்தார்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் நடவடிக்கைகள் வெளிப்படையாகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியை உற்றுநோக்கினால் பல்வேறு அரசியல் நோக்கங்கள் இருப்பது புரியும் என அவர் விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி பேசுவது வேறு, வெளியில் பேசுவது வேறு என்றும், அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு கொண்டு வர முயன்ற போது, இந்தியா கூட்டணி கட்சிகள் அதனை எதிர்த்து தோற்கடித்ததாகவும் வன்னிஅரசு தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் கூறினார். குறிப்பாக, உத்தரபிரதேசம் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், இதனால் பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்து,

மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஆபத்து குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்கனவே எச்சரித்துள்ளதாகவும் வன்னிஅரசு குறிப்பிட்டார். இறுதியாக, “தொகுதி மறுவரையறை மூலம் வடக்கின் ஆளுகைக்குள் தெற்கு சுருக்கப்படும் நிலை உருவாகக்கூடாது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என வன்னிஅரசு வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com