மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். பணநாயகத்தை முறியடித்து, அன்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது தனிப்பட்ட விஜய்யின் வெற்றியோ அல்லது தவெகவின் வெற்றியோ மட்டுமல்ல; மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான மக்களின் ஆதரவை மீண்டும் நிரூபித்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். வாக்குகளுக்குப் பணம் கொடுக்காமலும், வாக்காளர்களைத் தங்கவைத்து அவமானப்படுத்தாமலும், திருமங்கலம் மற்றும் ஈரோடு கிழக்கு தேர்தல் ஃபார்முலாக்களைப் பின்பற்றாமலும், அன்பு, பாசம், உறவு மற்றும் ஜனநாயகத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் ஊழல் சக்திகளின் கோட்டை அல்ல என்றும், மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலில் பேரங்கள் நடைபெற்றதாகக் கூறி அவதூறு பரப்பியவர்களுக்கு மக்கள் தங்களது வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இரண்டு நாட்கள் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் விமர்சித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அனுமதி கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்போதும் மக்களின் பக்கமே நிற்போம் என்றும், மக்களோடு மக்களாகக் கலந்து இருப்பதே தங்களது கடமை மட்டுமல்ல, மக்களுக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடன் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்காக முழுமையான அர்ப்பணிப்புடனும் நன்றியுணர்வுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் உறுதியளித்துள்ளார்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, குடும்பத்தில் ஒருவராகவும் உறவாகவும் நன்றி தெரிவிப்பதாக விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தவெக மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கும் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தனிப்பட்ட விஜய்யின் வெற்றியோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், பெண்களுக்கு எதிரான அவதூறு பேச்சுகள், தரம் தாழ்ந்த தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலைவர்கள், தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு எனத் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், இது அரசியல் நாகரிகத்திற்கும் தனிமனித நாகரிகத்திற்கும் கிடைத்த வெற்றி என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும் விஜய் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி இனிவரும் காலங்களிலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், எதிர்கால வெற்றிகளுக்கும் முன்கூட்டியே நன்றி கூறி, “நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்