பவன் கல்யாணின் 'ஸ்ட்ரடேஜியை' பின்பற்றுகிறாரா விஜய்? - 'ஜனநாயகன்' லீக்கை சந்தேகிக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது.
பவன் கல்யாணின் 'ஸ்ட்ரடேஜியை' பின்பற்றுகிறாரா விஜய்? - 'ஜனநாயகன்' லீக்கை சந்தேகிக்கும் நெட்டிசன்கள்!
Published on
Updated on
3 min read

சமீபத்தில் நடிகர் மற்றும் தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது. இந்நிகழ்வுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பி விஜய்க்கும், 'ஜனநாயகன்' படக்குழுவிற்கும் ஆதரவாக நின்றனர்.

'ஜனநாயகன்' லீக்: முதலில் இணையதளத்தில் 5 நிமிட காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில், அதனை தொடர்ந்து திரைப்படத்தின் முழு நீள பாடலும் வெளியானது. இந்த சம்பவம் குறித்து படக்குழு அதிர்ச்சியடைந்த நிலையில், முழுத்திரைப்படமும் இணையதளத்தில் வெளியானது. ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கடைசி திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தணிக்கை பிரச்சனையின் காரணமாக திரைப்படம் தற்போது வரை வெளியாகாமலேயே இருக்கிறது. இந்நிலையில், முழு திரைப்படமும் HD தரத்தில் இணையத்தில் வெளியானதால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தது.

இதுகுறித்து, கே.வி.என்.தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கவனத்திற்கு வந்த தகவலின்படி, அடையாளம் தெரியாத சில நபர்களால் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள், மற்றும் சில இடங்களில் படத்தின் பெரும்பகுதி சட்டவிரோதமாக அணுகப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. இது 'டிஜிட்டல் திருட்டு' எனும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட் (Torrents) அல்லது வேறு எந்த ஊடகத்தின் மூலமாகவும் இவ்வாறு கசிந்த உள்ளடக்கத்தை தரவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பகிர்தல் அல்லது பரப்புவது ஆகியவை காப்புரிமைச் சட்டங்களின்படி கடுமையான குற்றமாகும். இத்தகைய கசிந்த காட்சிகளுடன் எந்த வகையிலும் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட எவரும் அதன் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்பதோடு, உடனடி சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு இத்தகைய தகவல்கள் வந்தால், அதைத் திறக்கவோ, சேமிக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம். உடனடியாக நீக்கிவிடவும்” என படத்தில் தயாரிப்புக்குழு தெரிவித்தது. இதனையடுத்து, இயக்குநர் ஹெச். வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்து செல்கிறது. வெளியீட்டிற்கு முன்பே இது கசிவது உண்மையிலேயே வேதனையளிக்கிறது. தயவுசெய்து இதைப் பகிராமல் ஆதரவு தாருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில், "ஒவ்வொரு படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையுடன் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுப் பிரதியைத் தவிர்க்கவும். தயவுசெய்து திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருந்து, அங்கு சென்று பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமைகளை மதியுங்கள். கடின உழைப்பை மதியுங்கள். திரையுலகை மதியுங்கள்" என்று எழுதியுள்ளார். மேலும், நடிகர் விஷால், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பூ, ஜீவா, ஜெய் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் திரைப்பட குழுவிற்கு ஆதரவாக இருந்தனர். கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் சமூகவலைதளங்களில் லீக்கானது எங்களுக்கும் வருத்தமளிக்கிறது அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயகன் படம் திரையரங்கில் வெளியாகும்போது ஒரு ரசிகனாக நான் திரையரங்கும் சென்று பார்ப்பேன்" என்று விஜய்க்கு ஆதரவாக பேசினார்.

அரசியலாகிறதா 'ஜனநாயகன்' திரைப்படம்?: 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, இந்தக் கசிவை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் "கூட்டுச் சதி" என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் குறித்து, அண்ணாமலை, "இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல். முருகனைத் தொடர்புப்படுத்தி பேசுவது வன்மத்தின் உச்சம். 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாக்கத்தில் பல பேரின் உழைப்பு, ரத்தம் கலந்துள்ளது. அதை எந்த விஷக்கிருமிகள் வெளியிட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

தவெக தலைவர் விஜய்க்கு, அரசியல் களத்தில் பலரும் அழுத்தம் தருவதாக பல செய்திகள் வரும் நிலையில், தற்போது, விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது "அரசியல் அழுத்தத்தில் இருந்து துறை ரீதியான அழுத்தமாக மாறுகிறதா?" என்று பல சினிமா ரசிகர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு ஒரு அரசியல் வட்டாரத்தில் நடந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் 'பவர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பவன் கல்யாண் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. அவரின் 'Atharintiki Daaredi' படத்தின் 90 நிமிடக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது. தனக்கு 'எதிராக' இருக்கும் ஒருவரால் செய்யப்பட்ட 'திட்டமிட்ட செயல்' என்று அவர் நம்புவதாக ரசிகர்கள் முன்னிலையில் கூறினார். இப்படம் தமிழில் சுந்தர்.C இயக்கி நடிகர் சிம்பு நடித்து வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படமாகும்.

மேலும் அவர், "படம் ஆன்லைனில் கசிந்ததற்குக் காரணம் திருட்டுப் பிரதி என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இதில் ஒரு பெரிய சதித்திட்டம் சம்பந்தப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு திட்டமிட்ட செயல் என்று நம்புவதற்கு எனக்குக் காரணங்கள் உள்ளன. இது திருட்டுப் பிரதியல்ல, எனக்கு எதிரான ஒரு சதி," என்று பவன் கூறினார். இருப்பினும், அந்த நடிகர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் "இந்தச் சதிக்குப் பின்னால் உள்ள நபரை நான் சும்மா விடப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.

தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் எதிரிபார்க்கப்பட்ட பவன் கல்யாணின் 'Atharintiki Daaredi' திரைப்படம் திருட்டுத்தனமாகப் பரவியதாக வரும் செய்திகள், அப்படத்தில் பெருமளவு முதலீடு செய்தவர்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு மலிவான விளம்பர உத்தியாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக பிரபல செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டன. முதலில் 'Atharintiki Daaredi' திரைப்படம் ஆகஸ்ட் 7, 2013 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்த இப்படம், அரசியல் பதட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு, பின்னர் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கசிவின் காரணமாக, இப்படம் செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்டது. இதனிடையில்தான் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி இருந்தாலும், ஆச்சரியப்படும் விதமாக, இந்தச் சம்பவம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்தது.

இவரது திரைப்படங்கள் பல இதுபோல் இணையத்தளத்தில் கசிந்துள்ளது. இதனால் இவரது பெயர் இணையவாசிகள் மற்றும் ரசிகர்களிடையே உயிர்ப்புடன் இருந்தது. இது இவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு உந்துகோலாகவே இருந்தது என்று பல விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும், இணையத்தில் இந்த போக்கு ஒரு காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியது. தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் இதுபோன்று நடப்பது பவன் கல்யாணின் அரசியல் நகர்வையே நினைவூட்டியே செல்கிறது என்று இணையவாசிகள் தங்களது விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com