

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மக்களும் மிகுந்த கவனத்துடன் இதை கையாள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களில் 140 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் சுமார் 4,500 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக பதிவாகியிருந்தன. இதில் 160 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக அடையார், அண்ணா நகர் மற்றும் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காய்ச்சல் இருப்பதாக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் தற்போது காணப்படும் காய்ச்சல் பாதிப்புகள் டெங்கு தொற்றால் மட்டுமே ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்குவுடன் சேர்த்து பல்வேறு வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளும் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்ஃப்ளூயன்சா ஏ, ரைனோ வைரஸ் மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ் போன்ற தொற்றுகளும் பதிவாகி வருகின்றன.
இதனிடையே, எச்1என்1 தொற்றுகளின் நிலவரத்தையும் தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் H1N1 பாதிப்பு அதிகமாக இருந்ததாகவும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பருவமழைக்கு பிறகு டெங்கு, சிக்குன்குனியா, டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் பல்வேறு சுவாச நோய்த்தொற்றுகளுக்கான கண்காணிப்பை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்துவதுடன், நோயாளிகளின் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அதனை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி சுயமாக மெடிக்கலில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்ச்சல் மட்டும் இருப்பதை வைத்து எந்த வகையான தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியாது என்பதால், விரைவாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம். பூந்தொட்டிகள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், பழைய டயர்கள், மொட்டை மாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள் பெருக வாய்ப்புள்ளது. அவற்றை தொடர்ந்து அகற்றுவதுடன் கொசு வலைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல், மார்பு வலி, கடுமையான தலைவலி, தொடர் வாந்தி, கடுமையான வயிற்று வலி, மனக்குழப்பம், சிறுநீர் அளவு குறைதல், இரத்தப்போக்கு அல்லது நீரிழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்