

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் லண்டன் சென்றிருந்த நிலையில், தமிழகத்திற்கு மொத்தம் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த முதலீட்டின் மூலம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் சுமார் தமிழகத்தில் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் சுமார் 400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி நிறுவனம் ஒன்று தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீடு செய்வதற்கான விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.
மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி நிறுவனம், அதன் இந்திய நிறுவனமான Sria Solutions மூலம் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள தனது உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 600 உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், சென்னையின் மவுண்ட் to பூந்தமல்லி பகுதியில் சர்வதேச நிறுவனத்திற்காக GCC அமைக்கும் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர்தர வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ரூ.2,500 கோடி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் குறித்து தீரஜ் இந்துஜா, முதல்வர் விஜய்யிடம் எடுத்துரைத்தார். மேலும், காற்றாலை ஆற்றல் மற்றும் வர்த்தக வாகன ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரிட்டன் - இந்தியா விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக பந்தத்தின் (CETA) மூலம் உருவாகும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை பயன்படுத்தி, தமிழகத்துடன் வர்த்தகம், கொள்முதல் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துமாறு உலகளாவிய நிறுவனங்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu), விண்வெளி, பாதுகாப்பு, ரசாயனம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 10 முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் முக்கியமான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்