"முட்டுக்கொடுக்கிறார்கள் சிறுத்தைகள்" - விமர்சனங்களுக்கு திருமாவளவன் பதிலடி! கட்சியினருக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்?

விடுதலைச் சிறுத்தைகள் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர்
Thirumavalavan
Published on
Updated on
2 min read

சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்தெல்லாம் முக்கிய கருத்துக்களை முன் வைத்துள்ளார். அவர் பேசியதாவது, “மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி குறித்து அறிந்தவுடன், அதனை கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அதனை உடனடியாக பரிசீலித்து, தனியார் டெண்டர் முயற்சியை கைவிடுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழமைக் கட்சிகள் சுட்டிக்காட்டும் கருத்துகளை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறை பாராட்டுக்குரியது” என்றும் தவெக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

“முன்னதாக ஜோசியரை ஓ.எஸ்.டி.யாக நியமித்த போதும் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த உத்தரவை முதலமைச்சர் திரும்பப் பெற்றார். அதேபோல் தற்போது தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவையும் கைவிட்டுள்ளார். இந்த அணுகுமுறைக்கு முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக பயணித்து வந்தது. கூட்டணி ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கினோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக - அதிமுக இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்று கருதிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் மாற்று சக்தியாக உயர்த்தி நிறுத்தியுள்ளனர். மக்களின் தீர்ப்பை மதிப்பது அரசியல் கடமை என்பதால், அவசரப்படாமல் நிதானமாக தவெக - வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.

அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு உருவானது. விளிம்புநிலை மக்களுக்காக செயல்படும் ஒரு இயக்கம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், திமுகவைச் சேர்ந்த சிலர் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே காரணத்திற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியை மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று என்பதை திமுக போன்ற அனுபவமிக்க இயக்கம் நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும், முன்பு 'திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள் சிறுத்தைகள்' என்று விமர்சித்தவர்களே, தற்போது தவெகவுடன் அமைச்சரவையில் இடம் பெற்ற பிறகும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருகின்றனர் என்பதை எங்கள் கட்சித் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து எழும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "எந்தச் சூழலிலும் விடுதலைச் சிறுத்தைகள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சிலரே இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதுகுறித்து எங்கள் கட்சித் தோழர்கள் தெளிவுபெற வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளித்து உள்ளேன்," என்றார்.

சமீபத்தில் திமுக MP ஆ ராசா விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்தும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வலைதளங்களில் பதிவிட்டும், பொது நிகழ்ச்சிகளில் பேசியும் வந்தார். இதை விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு எதிர்த்திருந்தார். மேலும் பல்வேறு உறுப்பினர்கள் அதற்கு பதிலளித்தும் வந்தனர். தற்போது அக்கட்சியின் தலைவர் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். மேலும் தனது கட்சியினருக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com