தவெக தலைவர் விஜய் தற்போது பெரும்பான்மையோடு முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் போடப் போகும் முதல் கையெழுத்து எது என்பது பலராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாகும்.
தவெக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பெரும்பான்மையான 118 இடங்கள் கிடைக்காமல் இருந்தது. இதனால் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் இருந்த நிலையில் தவெக-விற்கு விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎல்எல், காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து 108 இடங்களை வெற்ற தவெக 120 இடங்களை பெரும்பான்மையாக பெற்றது. இதனையடுத்து ஆளுநரை சந்தித்து நாளை பதவி ஏற்க தவெக தலைவர் விஜய் தயாராகி வரும் நிலையில் அவரின் முதல் கையெழுத்து எதற்கு போடுவார்? என்பது பலரின் கேள்வி குறியாக இருக்கிறது.
தவெக சார்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள்: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கென தனி இலாக்கா உருவாக்கப்படும். அந்த இலாக்கா தவெக தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், மதிப்புமிகு மகளிர் திட்டம் மூலம் 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என்றும், அண்ணன் சீர் திட்டம் மூலம், திருமணமாகப்போகும் பெண்களுக்கு திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும் என்றும், காமராஜர் கல்வி உறுதித் திட்டம் மூலம், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையும் கல்வி இடைநிற்றலே இல்லாமல் செல்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், வெற்றிப் பயணம் திட்டம் மூலம், அரசு பேருந்துகளில் கட்டணமின்றி தமிழ்நாட்டின் எந்த மூலைக்கும் இலவசமாக பெண்கள் சென்று வரலாம் என்றும், ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ் மூலம், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'ராணி வேலுநாச்சியார் படை' உருவாக்கப்படும் என்றும், அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க 'அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள்' அமைக்கப்படும் என்றும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் திட்டம்தான் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வழங்கப்படும் என்றும், சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், விலையில்லா சானிட்டரி பேட்ஸ், ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் போன்ற பெண்களுக்கான பல திட்டங்களை தவெக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு, கல்வி உத்தரவாதம் திட்டம், தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புச் சுழற்சி தாமதம் ஏற்படா வண்ணம் 365 நாட்கள் முடிக்கச் சட்டப்படியான கால அட்டவணை உருவாக்கப்படும் என்றும், வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதியாக வழங்கப்படும் என்றும், ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் பயிற்சிகள் வழங்கப்படும். அதன்படி, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 10,000, ஐடிஐ (ITI) மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 8000 மாநில அரசே வழங்கும் என்றும், இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ. 25 லட்சம் வரை பிணையமில்லா தொழில் கடன் பெற அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்றும், நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம், 'முதல்வர் மக்கள் சேவை நண்பர்' பதவியின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தலா ரூ. 18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு, படைப்பாளி தொழில்முனைவோர் திட்டம் போன்ற திட்டங்கள் இளைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்குச் சட்டப்பூர்வ ஆதரவு விலை உறுதி செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு ₹3,500; கரும்பு டன்னுக்கு ₹4,500 வழங்கப்படும் என்றும், 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளுக்குக் கூட்டுறவுப் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும் என்றும், நெசவாளர்களுக்கு நூல் விலை உயர்வு மற்றும் மின்கட்டணச் சுமையைக் குறைக்க, ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.30,000 வங்கி மூலம் நேரடியாக வழங்கப்படும் என்றும், கைத்தறிக்கு 500 யூனிட், விசைத்தறிக்கு 1,500 யூனிட் வரை இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு மற்றும் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
தற்போது தவெக தலைவர் விஜய் பதவியேற்றதும் இதில் எதற்கு முதலில் கையொப்பமிடுவார்? என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.