வங்கக்கடலில் உருவாகிய டித்வா புயல் இலங்கையை அடித்து நொறுக்கிய கையோடு, தமிழகம் வந்தது. ஆனால் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும் பெரும் மழை பொழிவு எதையும் தரவில்லை. ஆனால் இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப் பொழிவை தந்து வருகின்றன.
நேற்று அதிகாலை முதல் தற்போது வரை பெய்துவந்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை அசோக் நகர் ராஜமன்னார் பிரதான சாலையில் உள்ள ரெஸ்ட்ரோ டீக்கடை அருகே பல ஆண்டுகள் பழமையான ராட்சச அத்திமரம் திடீரென முறிந்து கீழே விழுந்தது.இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நேரம் பாதிக்கப்பட்டது.
மரம் விழுந்த நேரத்தில் அந்த சாலையில் வாகனங்களோ, பொதுமக்களோ இல்லாததால் எந்த வகையான உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
தொடர்ச்சியான மழை மற்றும் பலத்த காற்றின் தாக்குதலால் மரம் வேரோடு சாய்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து அசோக் நகர் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினாவில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னைக்கு அருகே ஏற்கனவே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக தென்மேற்கு திசையில் சுற்றி வந்த தாழ்வுமண்டலம் தற்போது வலுவிழந்தது, குறிப்பிடத்தக்கது. இது சென்னையிலிருந்து 40.கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையின் புறநகர் பகுதியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக, ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர் மேன், தனது X -தள பக்கத்தில், “கடந்த 24 மணி நேரமாக சென்னை கடற்கரைக்கு அருகில் நிலைகொண்டிருந்த டிட்வா புயல், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழுந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இது அடுத்த 18 மணி நேரம் சென்னை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு மாலை முதல் இரவு வரை மேலும் வலுவிழந்து, சென்னைக்கு தெற்கே கல்பாக்கம் பகுதிக்கு அருகே கரையைக் கடக்கும்” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.