மதுரவாயல் தொகுதியின் மகுடம் யாருக்கு? தி.மு.க.வின் கோட்டையை அ.தி.மு.க. தகர்க்குமா? - அதிரடி கருத்துக் கணிப்பு!

வெறும் 20 முதல் 30 சாவடிகளே இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால், தேர்தல் நேரத்தில் நிலவும் அரசியல் சூழல் முடிவுகளை மாற்றக்கூடும்..
மதுரவாயல் தொகுதியின் மகுடம் யாருக்கு? தி.மு.க.வின் கோட்டையை அ.தி.மு.க. தகர்க்குமா? - அதிரடி கருத்துக் கணிப்பு!
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் மதுரவாயல் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் முக்கிய அங்கமாகவும், வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதியாகவும் விளங்கும் மதுரவாயல், 2011-ல் உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். தற்போதைய எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வின் காரப்பாக்கம் கணபதி பணியாற்றி வரும் நிலையில், வரவிருக்கும் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி அனல் பறக்கிறது.

Maduravoyal constituency

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பார்க்கும்போது, 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 41.65 சதவீதத்துடன் பெரும்பான்மையாக உள்ளனர். இளம் வாக்காளர்கள் (18-25 வயது) 12 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17.37 சதவீதமும் உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் பட்டியல் சமூகத்தினர் 38 சதவீதமும் (இதில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்), வன்னியர் சமூகத்தினர் 32 சதவீதமும் உள்ளனர். நாயுடு மற்றும் முதலியார் சமூகத்தினர் முறையே 10 மற்றும் 7 சதவீதம் பேர் வசிக்கின்றனர். 90 சதவீத நகர்ப்புறத் தன்மையைக் கொண்ட இத்தொகுதியில் வசதி படைத்தவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

மதுரவாயல் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

Maduravoyal constituency

மதுரவாயல் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் முழுமையடையாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. மழைக்காலங்களில் நெற்குன்றம் மற்றும் மதுரவாயல் ரேஷன் கடைப் பகுதிகளில் நீர் தேங்குவது, அடிக்கடி சாலைகள் தோண்டப்படுவதால் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல்கள் போன்றவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் ஈரடுக்கு மேம்பாலப் பணிகளால் ஏற்படும் கடும் நெரிசலுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. மேலும், உட்புறப் பகுதிகளுக்குக் கூடுதல் மினி பேருந்து வசதிகள் தேவை என்பதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

Maduravoyal constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 95 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. 65 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. சுமார் 68 சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கக்கூடிய (Swing Booths) நிலையில் இருந்தன. அப்போது நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மையம் இணைந்து 20 சதவீத வாக்குகளைப் பிரித்தது அ.தி.மு.க.வின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

Maduravoyal constituency

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு 50 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அப்போது சுமார் 74 சாவடிகள் ஊசலாடும் நிலையில் இருந்தன.

Maduravoyal constituency

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, மதுரவாயல் தொகுதியில் தி.மு.க.விற்குச் சிறிய முன்னிலை (Slight Edge) இருப்பதாகத் தெரியவருகிறது. தி.மு.க. 41 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 38 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து சுமார் 22 முதல் 26 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, த.வெ.க. மட்டும் 20 சதவீத வாக்குகளைப் பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி வித்தியாசத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சுமார் 3 சதவீத வாக்குகள் மட்டுமே வேறுபாடு உள்ளது. பூத் வாரியான கணக்கீட்டில் தி.மு.க. 150 சாவடிகளிலும், அ.தி.மு.க. 130 சாவடிகளிலும் முன்னிலையில் உள்ளன. வெறும் 20 முதல் 30 சாவடிகளே இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதால், தேர்தல் நேரத்தில் நிலவும் அரசியல் சூழல் முடிவுகளை மாற்றக்கூடும். தற்போதைய நிலவரப்படி காரப்பாக்கம் கணபதிக்கும் பெஞ்சமினுக்கும் இடையிலான நேரடிப் போட்டியில் தி.மு.க. கூட்டணி முந்தி நிற்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com