EXCLUSIVE: பூவிருந்தவல்லி கோட்டையைத் தக்கவைக்குமா தி.மு.க.? விஜய் ஏற்படுத்தப் போகும் சேதாரம் யாருக்கு? "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து சுமார் 15 முதல் 17 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது..
poonamallee constituency
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சென்னையின் நீட்சியாகவும், வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதியாகவும் விளங்கும் இத்தொகுதி தனித் தொகுதியாகும். தற்போதைய எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வின் கிருஷ்ணசாமி உள்ளார். உழைப்பாளர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி, சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பார்க்கும்போது, 18 முதல் 25 வயதுடைய இளம் வாக்காளர்கள் 12.16 சதவீதமும், 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 40 சதவீதமும் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 51 சதவீதத்துடன் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் பட்டியல் சமூகத்தினர் 29 சதவீதமும், வன்னியர் சமூகத்தினர் 19 சதவீதமும், முதலியார் சமூகத்தினர் 13 சதவீதமும் உள்ளனர். நாயுடு மற்றும் இதர பிரிவினர் இணைந்து 39 சதவீதம் பேர் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.

poonamallee constituency

பூவிருந்தவல்லி தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகக் கழிவுநீர் மேலாண்மை மற்றும் மழைநீர் வடிகால் வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும், போக்குவரத்து நெரிசலும் மக்கள் சந்திக்கும் அன்றாடச் சிக்கல்களாகும். அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்பது 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும், அரசு கலைக் கல்லூரி அமைத்தல், இரவு நேரப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கிராமப்புறச் சாலைகளை இணைத்தல் போன்ற அடிப்படைத் தேவைகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

பூவிருந்தவல்லி தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்

poonamallee constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமி சுமார் 90,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 180 வாக்குச் சாவடிகளில் பலமாகவும், அ.தி.மு.க. 120 சாவடிகளில் மட்டுமே பலமாகவும் இருந்தன. சுமார் 111 சாவடிகள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கக்கூடிய (Swing Booths) நிலையில் இருந்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெரும் முன்னிலை வகித்தது. அப்போது சுமார் 77 சாவடிகள் ஊசலாடும் நிலையில் இருந்தன. நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க.வின் வாக்குகளை 68 சதவீத அளவிற்குப் பாதித்து தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியது.

poonamallee constituency

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, பூவிருந்தவல்லி தொகுதியில் தி.மு.க. மீண்டும் வலுவான நிலையில் உள்ளது. இந்த ஆய்வின்படி தி.மு.க. 43 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. 37 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து சுமார் 15 முதல் 17 சதவீத வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளது என்றும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான வெற்றி வித்தியாசம் சுமார் 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

poonamallee constituency

தற்போதைய சூழலில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமி தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவராக இருப்பதும், அ.தி.மு.க.வின் வாக்குகள் த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சியால் சிதறடிக்கப்படுவதும் தி.மு.க.விற்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், அ.தி.மு.க. மற்றும் ஆ.ம.மு.க. போன்ற கட்சிகள் இணைந்து செயல்படும் விதம் இந்த முடிவுகளில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். தற்போதைய நிலவரப்படி பூவிருந்தவல்லியில் தி.மு.க. கூட்டணி 'ஹாட்ரிக்' வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com