

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேற்று கரூரில் முதல்வர் விஜய் நிழத்திய உரை குறித்தும், அதன் மீதான எதிர்க்கட்சியின் விமர்சனம் குறித்தும் பதிலளித்துள்ளார். மேலும் கரூர் சம்பவம் குறித்தும் அப்போதைய திமுக அரசிற்கு கேள்விகளை அடுக்கியுள்ளார்.
செய்தியாளர் ஒருவர், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியதை மேற்கோள் காட்டி, “ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பணி கொடுப்பீர்களா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “எந்தெந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என முதல்வர் ஆலோசித்து செய்வார். பல இடங்களில் இது போல துரோகங்கள் நடைபெற்று உள்ளது. ஸ்டெர்லைட் குறித்து பேசிய திமுக அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
கரூர் உயிரிழந்த சம்பவம் பணி ஆணை வழங்கியதில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, கரூர் உயிரிழப்பு மிகப்பெரிய சதியின் வேலைப்பாடு. கட்சியின் சார்பாக அவர்களுக்கு உதவி செய்யப்பட்டது. சதி திட்டத்தால் நிகழ்த்தப்பட்டது இதை யாரும் மறக்க மாட்டோம். இடைத்தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை ஒட்டுமொத்த கட்சியும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். மக்களின் யார் உண்மையான தலைவர்? சுயநலவாதி யார்? ஊழல்வாதி யார்? என்று மக்களுக்கு தெரியும். பணி நியமன ஆணை வழங்கியது சரிதான் என்றும் தெரிவித்தார்.
கரூர் துயர சம்பவத்தில் யார் ஓடினார்கள் என்று கரூர் மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவு குறித்த கேள்விக்கு, கரூரில் இருந்த SP என்னோடு தான் இருந்தார். SP-கே தெரியாத விஷயம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரியும். எஸ் பி யிடம் நானும் கேட்டேன் என்ன நடைபெற்றது. என விவரம் கேட்டேன் அப்படி எதுவும் இல்லை சிலர் மயங்கி விட்டதாக சொன்னார். அவர்கள் அனைவரும் GH அருகில் ரூம் போட்டு காத்திருந்தார்களா? எப்படி 5 நிமிடத்தில் அங்கு வந்தார்?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தபோது, அன்றைய தினத்தில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் கூட்டம் எதற்காக ரத்து செய்யப்பட்டது? இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது. இதேபோன்று விடைதெரியாத நிறைய கேள்விகள் திமுக மீது இருக்கின்றன. அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும். மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தெரிந்தால் போதும்” என்றும் தெரிவித்தார். அமைச்சர் நிர்மல் குமார், இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார்? என்ற கேள்வி சமூக வலைத்தளத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகி உள்ளது. ராஜிவ் காந்தி மரணத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது முன் வைக்கும் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்