ராமநாதபுரம் கோட்டையை தக்கவைக்குமா திமுக? அதிமுகவின் வியூகம் எடுபடுமா? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்

ராமநாதபுரம் தொகுதியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்து விரிவான கள ஆய்வு
ராமநாதபுரம் தொகுதி
Published on
Updated on
3 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தெற்கின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரம் புண்ணிய தலம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்களின் மனநிலை குறித்து விரிவான கள ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூக நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் இத்தொகுதியில், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.

Ramanathapuram constituency

ராமநாதபுரம் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 13.1 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31 சதவீதமும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15.9 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகப் பார்க்கும் போது, முக்குலத்தோர் 25 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக யாதவர்கள் 16 சதவீதம், முஸ்லிம்கள் 15 சதவீதம், நாடார்கள் 10 சதவீதம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். ஆன்மீகம் மற்றும் கடல் சார்ந்த தொழில்களைக் கொண்ட ஒரு முக்கியத் தொகுதியாக இது விளங்குகிறது.

ராமநாதபுரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பு விவரத்தை தெரிந்து கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
Ramanathapuram constituency

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மீனவ மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியான மாவட்டம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாததால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும், மீன் பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் குளிர்சாதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Ramanathapuram constituency

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் 51.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாஜகவின் குப்புராம் 28.3 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றன. அந்தத் தேர்தலில் திமுக 212 பூத்களில் மிக வலுவாக இருந்தது. அதேசமயம் அதிமுக கூட்டணி வெறும் 78 பூத்களில் மட்டுமே வலுவாக இருந்தது. திமுக 87 பூத்களில் பலவீனமாகவும், அதிமுக கூட்டணி 152 பூத்களில் பலவீனமாகவும் இருந்தன.

Ramanathapuram constituency

தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ்கனி 49.6 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது பிடியைத் தக்கவைத்துக் கொண்டார். இதில் திமுக கூட்டணி 128 பூத்களில் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Ramanathapuram constituency

தற்போதைய 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 41 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 34 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் 11 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளையும் என மூன்றாம் தரப்பு சக்திகள் இணைந்து சுமார் 19 சதவீத வாக்குகளைப் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 197 பூத்களில் வலுவான நிலையில் உள்ளதாகவும், அதிமுக 142 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 160 பூத்கள் இன்னும் எந்தப் பக்கம் என்பதைத் தீர்மானிக்க முடியாத 'ஸ்விங்' நிலையில் உள்ளன.

Ramanathapuram constituency

இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏவின் செயல்பாடுகள் மற்றும் தொகுதியில் திமுக கொண்டு வந்துள்ள சில திட்டங்கள் அவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். அதேசமயம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக் கணக்குகள் தேர்தல் நேரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி ராமநாதபுரம் கோட்டையில் உதயசூரியன் சின்னமே ஒரு படி முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com