

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்தும் 'ஆபிரகாம் ஒப்பந்தத்தில்' (Abraham Accords) பாகிஸ்தானையும் இணைய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். இஸ்ரேலை உள்ளடக்கிய இந்த இராஜதந்திரக் கூட்டணியில் சேருவது, எதிர்காலத்தில் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடனான பிராந்திய அமைதி உடன்படிக்கைக்கு மிக முக்கியமானது என்று அவர் கருதுகிறார். இந்த ஒப்பந்தத்தில் சேர விருப்பம் இல்லாத நாடுகள், தாங்கள் முன்வைக்கும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் பங்கேற்க முடியாது என்று ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளுடன் பாகிஸ்தானையும் இதில் இணைய வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்துகிறார். இந்த கூட்டணி மத்திய கிழக்கை பொருளாதார ரீதியாக வலுவாக்கும் என்று ட்ரம்ப் நம்புகிறார்.
ட்ரம்ப்பின் இந்த முன்மொழிவை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இஸ்ரேல் விவகாரத்தில் தங்கள் நாட்டின் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்று இஸ்லாமாபாத் அறிவித்துள்ளது. பாலஸ்தீன அரசு உருவாக்கப்படும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது என்ற தங்களது பழைய நிலையிலேயே உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் நம்பகத்தன்மையைச் சந்தேகமாகப் பார்க்கும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர், எவ்விதத்திலும் நம்பிக்கையில்லாதவர்களுடன் எப்படி அமர்ந்து பேச முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1967-ஆம் ஆண்டு எல்லைகளின்படி, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு தனி பாலஸ்தீன அரசு அமையும் வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
ஒருவேளை, சர்வதேச அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் இணைய ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு ஒரு விசித்திரமான நிர்வாகச் சிக்கல் ஏற்படும். பாகிஸ்தான் பாஸ்போர்ட்டின் உட்புறத்தில், "இந்த பாஸ்போர்ட் இஸ்ரேல் தவிர உலகின் அனைத்து நாடுகளுக்கும் செல்லும்" என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை அங்கீகரித்து அந்த நாட்டுடன் தூதரக உறவை ஏற்படுத்தினால், அந்த வாசகம் சட்டப்பூர்வமாகச் செல்லாது. எனவே, இஸ்ரேலை அந்தப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்படும். இது வெறும் அடையாள மாற்றம் மட்டுமல்ல, நாட்டின் சட்ட அமைப்பிலேயே செய்ய வேண்டிய முக்கியமான திருத்தமாகும்.
இந்த பாஸ்போர்ட் மாற்றம் என்பது சாதாரணமானதல்ல. ஏர்லைன்ஸ், விசா நடைமுறைகள் மற்றும் வர்த்தகம் போன்றவற்றிற்கு இந்த மாற்றம் மிக அவசியம். ஏற்கனவே வங்கதேசம் தனது மின்-பாஸ்போர்ட்டுகளில் (e-passports) இத்தகைய மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கும் அந்த நிலை வரலாம். இஸ்ரேலை அங்கீகரிக்கும் ஒரு நாடு, அதே நேரத்தில் தனது பாஸ்போர்ட்டில் அந்த நாட்டுக்குச் செல்ல அனுமதி இல்லை என்று கூறுவது இராஜதந்திர ரீதியாகச் முரணானது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் சேருவதாக இருந்தால், தங்கள் பாஸ்போர்ட் சட்டத்தை மாற்றியமைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முயற்சியால் இஸ்ரேலுக்கும் சில அரபு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான அமைதி உடன்படிக்கையாகும். பாலஸ்தீன விவகாரம் தீரும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இந்த நாடுகள் நேரடியாக உறவை ஏற்படுத்திக்கொண்டன. இதன் மூலம் நேரடி விமானச் சேவைகள், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்றவை சாத்தியமானது. இந்த ஒப்பந்தம் ஈரான் போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு பிராந்தியக் கூட்டணியாகவும் பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறதா என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.