கனவு தேசத்தில் கதவடைப்பு! இந்திய மாணவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி.. கனடா கல்வி விசா எண்ணிக்கையில் 50% குறைப்பு! புதிய விதிமுறைகள் என்னென்ன?

உலகிலேயே அதிக அளவில் மாணவர்களைக் கனடாவிற்கு அனுப்பும் நாடான இந்தியாவுக்கு ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கனவு தேசத்தில் கதவடைப்பு! இந்திய மாணவர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி.. கனடா கல்வி விசா எண்ணிக்கையில் 50% குறைப்பு! புதிய விதிமுறைகள் என்னென்ன?
Published on
Updated on
2 min read

சர்வதேச மாணவர்களின் உயர்கல்வித் தேர்வுகளில் முன்னணி நாடாக விளங்கும் கனடா, தற்போது தனது இம்மிகிரேஷன் மற்றும் கல்வி விசா கொள்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையில் ஒரு தற்காலிகமான தேசிய அளவிலான வரம்பை கனடா அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வளர்ந்து வந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மாற்றம், உலகிலேயே அதிக அளவில் மாணவர்களைக் கனடாவிற்கு அனுப்பும் நாடான இந்தியாவுக்கு ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததற்கான அடிப்படைக் காரணம், கனடாவில் நிலவும் கடுமையான வீட்டு வசதி நெருக்கடி ஆகும். வெளிநாட்டு மாணவர்கள் அதிக அளவில் குவிந்ததால், நகரங்களில் வாடகை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததுடன், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மற்றச் சமூக உள்கட்டமைப்புகளிலும் தாங்க முடியாத சுமை ஏற்பட்டது. மேலும், குறைந்தத் தரத்திலானக் கல்வியை வழங்கும் லாப நோக்குள்ள சில கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், கல்வித் திட்டத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த வரம்பின் கீழ், 2026ஆம் ஆண்டில் மொத்தமாக வழங்கப்படும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 8 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் இலக்கைவிடப் பல மடங்கு குறைவாகும். இதனால், புதிதாகக் கனடாவிற்குப் படிக்க வர விரும்பும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் மிகக் கடுமையாகக் குறையும்.

இந்தக் கட்டுப்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் இந்திய மாணவர்கள் ஆவர். கனடாவில் உள்ளச் சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். புதிய வரம்பு விதிக்கப்பட்டதால், இந்திய மாணவர்களுக்கான படிப்பு அனுமதி நிராகரிப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. முன்னர் முப்பத்தி இரண்டு சதவீதமாக இருந்த நிராகரிப்பு விகிதம், சில மாதங்களில் எழுபத்தி நான்கு சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், கனடாவில் உயர்கல்வி பயில வேண்டும் என்றக் கனவுடன் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. கனடாவில் உள்ள இளங்கலைப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு போன்ற பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கானப் போட்டி மிகவும் உக்கிரமடைந்து உள்ளது.

இந்தத் தேசிய வரம்பை நடைமுறைப்படுத்துவதற்காக, கனடா அரசாங்கம் 'மகாண ஒப்புதல் கடிதம்' (Provincial or Territorial Attestation Letter - PAL) என்ற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பெரும்பாலான இளங்கலைப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு போன்ற திட்டங்களில் சேர விரும்பும் புதிய மாணவர்கள், விண்ணப்பிக்கும் முன் தாங்கள் சேர விரும்பும் மாகாணத்திடம் இருந்து இந்த ஒப்புதல் கடிதத்தைப் பெற வேண்டியது கட்டாயமாகும். இதன் மூலம், எந்தெந்த மாகாணங்கள் எவ்வளவு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த மாகாண அரசுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இது, மகாணங்களின் உட்கட்டமைப்புக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

எனினும், இந்தத் தடையிலிருந்து சில உயர் கல்விப் பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முதுகலைப் படிப்பு (Master’s) மற்றும் முனைவர் பட்டம் (Doctoral) போன்ற உயரிய பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த 'மகாண ஒப்புதல் கடிதம்' தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை கல்வி நிறுவனங்களில் இந்தப் பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், கனடா அரசு, ஆய்வு மற்றும் உயர் கல்வித் திறன்களைக் கொண்ட மாணவர்களைத் தொடர்ந்து ஈர்க்க விரும்புகிறது என்பது தெளிவாகிறது. அதேபோல, படிப்பு முடித்த பிறகு வேலை அனுமதி (Post-Graduation Work Permit) பெறுவதற்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் வாழ்வாதாரச் செலவுக்கான நிதி ஆதாரத்தைக் காண்பிக்கும் அளவும் சுமார் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும், மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கனடா அரசு அதிகத் தரம் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளதையேக் காட்டுகிறது. இனிமேல், கனடாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியையும், நிதி ஆதாரத்தையும் மிகவும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com