பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு! இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் தீவிரவாதி சுட்டுக்கொலை!

கமாண்டர் ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்...
 அர்ஜுமண்ட் குல்சார்
அர்ஜுமண்ட் குல்சார்
Published on
Updated on
2 min read

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில், தடைசெய்யப்பட்ட அல்-பத்ர் தீவிரவாத அமைப்பின் முக்கிய ஆபரேஷனல் கமாண்டர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அர்ஜுமண்ட் குல்சார் என்கிற புர்ஹான் ஹம்சா என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத வலைப்பின்னலை வழிநடத்தியதற்காக இந்தியாவால் தேடப்பட்டு வந்தார். சமீபகாலமாக, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இது போன்ற மர்ம நபர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முக்கிய கமாண்டர்கள் இதுபோன்று சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகளின் தகவல்படி, ஹம்சா நீண்ட நாட்களாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, தெற்கு காஷ்மீர் இளைஞர்களைத் தீவிரவாதப் பாதைக்குத் தூண்டுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் ரத்னிபோராவைச் சேர்ந்த இவர், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அல்-பத்ர் அமைப்பில் இணைந்து, அதன் ஆபரேஷனல் கமாண்டராக உயர்ந்தார். அங்கிருந்தபடியே காஷ்மீரில் தீவிரவாத ஆள் சேர்ப்பு, நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் கடத்தல் போன்ற செயல்களை ஒருங்கிணைத்து வந்தார்.

2022-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். புல்வாமா மற்றும் தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்தைப் பரப்பியதற்காக இந்தியப் பாதுகாப்பு முகமைகளின் 'மோஸ்ட் வாண்டட்' பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். முன்பு புர்ஹான் வானி எவ்வாறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இளைஞர்களைத் தூண்டினாரோ, அதே பாணியிலான டிஜிட்டல் ரேடிக்கலைசேஷன் மாடலைத்தான் இவரும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புல்வாமா, ஷோபியான் மற்றும் அவந்திபோரா பகுதிகளில் இவருடைய நெட்வொர்க் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அங்கிருந்தபடியே பாகிஸ்தானில் உள்ள ஓவர் கிரவுண்ட் வொர்க்கர்களுடன் தொடர்பில் இருந்து, இந்தியாவுக்கு ஆயுதங்களையும், பணத்தையும் அனுப்பி வந்தார்.

வெடிகுண்டு மீட்பு, கிரனேடு தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதப் பயிற்சிக்காக இளைஞர்களைச் சேர்த்தது எனப் பல வழக்குகளில் இவருடைய பெயர் அடிபட்டது. இவருடைய மரணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் தீவிரவாதத்தைக் கொண்டுவரத் துடிக்கும் அமைப்புகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் இதனை ஒரு முக்கியமான வெற்றியாகப் பார்க்கின்றன. இவரைப் போலவே கடந்த ஏப்ரல் மாதம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் ஷேக் யூசுப் அப்ரிடி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முன்னதாக மார்ச் மாதத்தில், லஷ்கர் அமைப்பின் நிறுவன உறுப்பினரான அமீர் ஹம்சா மீது லாகூரில் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் லாகூரில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு வெளியே மர்ம நபர்களால் குறிவைக்கப்பட்டார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இவ்வாறு இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகள், தங்களுக்குப் பாதுகாப்பான இடமாக நினைக்கும் பாகிஸ்தான் மண்ணிலேயே அடுத்தடுத்து கொல்லப்படுவது அந்த அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த மர்ம நபர்கள் என்ற கேள்விக்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், இந்த வேட்டைத் தொடர்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com