"உலகெங்கும் உள்ள டோரோதிகள்" - சினிமா, அரசியல், விளையாட்டு.. LGBTQ+ அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்த பிரபலங்கள்!

அரசியல் சாசனத்தால் பல நாடுகள் LGBTQ+க்கு அங்கீகாரம் கொடுத்தாலும் சில நாடுகளில் இது நடைமுறைக்கு வரவில்லை.
Famous LGBTQ+ personalities
Famous LGBTQ+ personalities
Published on: 
Updated on: 
2 min read

வரலாறு நெடுக LGBTQ+ சமூக மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலும், எங்கே தங்களை ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே அவர்கள் தங்களது அடையாளங்களை குறித்து வெளிப்படையாக பேசுவது இல்லை. அந்த வகையில் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரோதி' திரைப்படம் LGBTQ+ மக்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களது வலிகளை எடுத்துச்சொல்லும் வகையிலும் அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு உலகளவில் அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்தது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை ஏற்றுக்கொள்ளாத பார்வையாளர்களும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், விளையாட்டு, அரசியல், கலை, சினிமா போன்றவற்றில் LGBTQ+வை சேர்ந்த பிரபலங்களை பற்றி இதில் பார்க்கலாம்.

விளையாட்டு:

நாட் ஸ்கிவர்-பிரண்ட், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். 200-க்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் என்றே கூறலாம். அவர் 2022-ல் தனது சக இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான கேத்தரின் பிரன்ட்டைத் திருமணம் செய்துகொண்டார். மேலும் 2025-ல், அவர்களின் முதல் குழந்தையான தியோவின் பிறப்பை அறிவித்தனர்.

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தான் ஒரு ஓரினச்சேர்க்கை உறவில் இருப்பதாய் வெளிப்படையாக அறிவித்தார். இதன்மூலம், வெளிப்படையாகத் தன்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்த நாட்டின் முதல் தடகள வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். சந்த், கிழக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா:

டோனி விருது வென்ற சிந்தியா எரிவோ, 2022-ம் ஆண்டு 'பிரிட்டிஷ் வோக்' இதழில் தான் இருபால் ஈர்ப்பாளர் என்பதைப் பற்றி முதன்முதலில் பகிரங்கமாகப் பேசினார்.

நெட்பிளிக்ஸில் வெளியான “பிரிட்ஜெர்டன்” தொடரின் கதாநாயகன் ஜொனாதன் பெய்லி, தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டன் ஸ்டூவர்ட், 2017-ல் “சாட்டர்டே நைட் லைவ்” நிகழ்ச்சியில் தனது ஓரினச்சேர்க்கை அடையாளத்தை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தினார்.

தற்போது, அமேசான் பிரைமில் டிரெண்டிங்கில் இருக்கும் 'லவ் ஹைபதேசிஸ்' என்ற நாவலை தழுவிய படத்தின் நாயகி லிலி ரெய்ன்ஹார்ட் தன்னை இருபால் ஈர்ப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெட்பிளிக்ஸ் தளத்தில் சக்கைபோடு போட்ட “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” தொடரில் நடித்த வில் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நோவா ஷ்னாப் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக எலன் டிஜெனெரஸ் தன்னை ஒரு லெசிபியன் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான சோனல் கியானி தன்னை ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அரசியல்:

மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரான மேனகா குருசுவாமி ஓரினச்சேர்க்கையாளர் என தன்னை அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

குஜராத்தில் உள்ள ராஜ்பிப்லாவின் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான இளவரசர் மன்வேந்திர சிங் கோஹில், ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்.

ஹரிஷ் ஐயர், 2019-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் மூலம், இந்தியாவில் தனது அடையாளத்தை குறித்து பகிரங்கமாக அறிவித்த ஓரினச்சேர்க்கையாளர் அரசியல்வாதி ஆனார்.

இது இந்தியாவில் என்றால், உலகளவில் பல அரசியல் தலைவர்கள் இதுகுறித்த கருத்துகளையும், தங்களது பாலின ஈர்ப்பு குறித்தும் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். 2011 முதல் 2014 வரை பெல்ஜியத்தின் பிரதமராகப் பதவி வகித்த எலியோ டி ரூபோ தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்தார்.

ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதமர் ஜோஹன்னா சிகுர்தார்டோட்டிர், 2009-ல் பதவியேற்றபோது, ​​வெளிப்படையாகத் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்துக்கொண்ட உலகின் முதல் அரசாங்கத் தலைவர் ஆனார்.

லக்சம்பர்க் நாட்டின் முன்னாள் பிரதமரும், தற்போதைய துணைப் பிரதமரும் ஆவார் ​​சேவியர் பெட்டல் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வெளிப்படையாகத் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்துக்கொண்ட இரண்டாவது அரசாங்கத் தலைவர் ஆனார்.

இதுபோன்று வரலாறு நெடுகிலும் பல எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், புகழ்பெற்ற ஓவியர்கள் பலரும் ஓரினசேர்கையாளர்களாக இருந்ததாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது ஆரம்பகாலம் முதல் இருந்தாலும் கூட 2026-ம் ஆண்டில் கூட இவர்களை ஏற்றுக்கொள்வதில் பலருக்கும் சிக்கல்கள் இருக்கிறதுதான் செய்கிறது. அரசியல் சாசனத்தால் பல நாடுகள் LGBTQ+க்கு அங்கீகாரம் கொடுத்தாலும் சில நாடுகளில் இது நடைமுறைக்கு வரவில்லை. அங்கிருக்கக்கூடிய LGBTQ+வை சேர்ந்தவர்களுக்கு சுதந்திரம் என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com