காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் அனைவரின் மனதிலும் தோன்றும் தீர்வு, "அதிக மரங்களை நட வேண்டும்" என்பதுதான். உலகம் முழுவதும் அரசுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் கோடிக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், ஒரு புதிய அறிவியல் ஆய்வு இந்த எண்ணத்தை சற்று மாற்றும் வகையில் புதிய சிந்தனையை முன்வைத்துள்ளது.
"எப்போதும் மரம் நடுவதுதான் ஒரே தீர்வு அல்ல; சில நேரங்களில் மரங்களைச் சுற்றி வளரும் கொடிகளை அகற்றினாலே காடு தானாகவே வேகமாக மீண்டு வளரும்" என்பதே அந்த ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்பாகும். மலேசியாவின் போர்னியோ (Borneo) மழைக்காடுகளில் நடத்தப்பட்ட நீண்டகால ஆய்வில், மரங்களை மூடி வளர்ந்திருந்த ஏறும் கொடிகளை (Lianas) அகற்றிய பகுதிகளில், மரக்கன்றுகள் நட்ட பகுதிகளைவிட மூன்று மடங்கு வேகமாக காட்டு மேற்கூரை (Forest Canopy) மீண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த முறை மரம் நடுவதைவிட 10 மடங்கு குறைந்த செலவில் செயல்படுத்த முடியும் என்றும் ஆய்வு கூறுகிறது.
போர்னியோ உலகின் மிக முக்கியமான வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒன்றாகும். எண்ணற்ற அரிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக இருக்கும் இந்தக் காடுகள், கடந்த பல தசாப்தங்களாக மரவெட்டுதல் மற்றும் மனித நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டப்பட்ட பிறகு, காடுகளுக்குள் அதிக சூரியஒளி நுழைகிறது. இதையே பயன்படுத்தி லியானா (Liana) எனப்படும் மரங்களில் ஏறி வளரும் மரக்கொடிகள் மிக வேகமாக பரவி விடுகின்றன.
இயற்கையாக பார்க்கும்போது இந்த லியானாக்களும் காட்டு சூழலின் ஒரு பகுதிதான். அவை பல விலங்குகளுக்கு உணவு வழங்குகின்றன. குரங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் மரங்களுக்கு இடையே நகர்வதற்கும் அவை உதவுகின்றன. ஆனால், காடு சேதமடைந்த பிறகு இவை அளவுக்கு அதிகமாக வளரும்போது பிரச்சினை தொடங்குகிறது.
இந்தக் கொடிகள், பெரிய மரங்களைச் சுற்றி மேலே ஏறி அவற்றின் கிளைகளை முழுவதுமாக மூடி விடுகின்றன. இதனால் மரங்களுக்கு தேவையான சூரியஒளி குறைகிறது. அதே நேரத்தில், மண்ணிலிருந்து கிடைக்கும் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கும் கடுமையான போட்டி உருவாகிறது. சில நேரங்களில் இந்த கொடிகளின் அதிக எடையால் மரக்கிளைகளே முறிந்து விழும் நிலையும் ஏற்படுகிறது. இதன் விளைவாக, காடு இயற்கையாக மீளும் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது.
இந்த நிலையை மாற்ற முடியுமா என்பதை அறிய விஞ்ஞானிகள் மலேசியாவின் Sabah Biodiversity Experiment என்ற மிகப்பெரிய ஆய்வு திட்டத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். சுமார் 500 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு சோதனைப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. சில இடங்களில் வழக்கம்போல புதிய மரக்கன்றுகள் மட்டும் நடப்பட்டன. மற்ற சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மரங்களில் ஏறியிருந்த அனைத்து பெரிய கொடிகளும் வெட்டப்பட்டு அகற்றப்பட்டன. இன்னும் சில பகுதிகள் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இயற்கையாக வளர அனுமதிக்கப்பட்டன.
இந்த ஆய்வு சில மாதங்கள் அல்ல, பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டது. 2013 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் LiDAR (Light Detection and Ranging) என்ற லேசர் வரைபட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காட்டு மேற்கூரையின் உயரம், அடர்த்தி மற்றும் வளர்ச்சி மிகவும் துல்லியமாக அளவிடப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம், காடுகளின் மூன்று பரிமாண அமைப்பை (3D Structure) முழுமையாக பதிவு செய்யும் திறன் கொண்டது.
ஆய்வு முடிவுகள் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியப்படுத்தின. மரங்களை மூடியிருந்த கொடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில், காட்டு மேற்கூரை மற்ற பகுதிகளைவிட மூன்று மடங்கு வேகமாக வளர்ந்தது. ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 27 சென்டிமீட்டர் உயர வளர்ச்சி பதிவானது. மேலும், புதிய மரங்கள் வேகமாக வளர்ந்ததோடு, ஏற்கனவே இருந்த பெரிய மரங்களின் உயிரிழப்பும் கணிசமாகக் குறைந்தது. இதனால் முழு காட்டு அமைப்பும் விரைவாக மீண்டு வந்தது.
இதன் இன்னொரு மிகப்பெரிய நன்மை கார்பன் சேமிப்பு ஆகும். வளர்ந்து வரும் காடுகள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடை உறிஞ்சி சேமிக்கின்றன. இதுவே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய இயற்கை வழிமுறைகளில் ஒன்றாகும். கொடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில், மரங்கள் வேகமாக வளர்ந்ததால் கார்பன் சேமிக்கும் திறனும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது என்று ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் பொருளாதார ரீதியிலான தகவலும் முக்கிய கவனம் பெற்றுள்ளது. பொதுவாக ஒரு காடு சேதமடைந்த பிறகு, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வளர்த்து மீண்டும் நடுவது மிகவும் செலவான செயலாகும். ஆனால் ஏற்கனவே இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்கும் மரங்களைப் பாதுகாக்க, அவற்றை மூடியுள்ள கொடிகளை மட்டும் வெட்டுவது மிகவும் எளிதான மற்றும் குறைந்த செலவிலான நடைமுறையாகும். ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, இந்த முறை மரம் நடும் திட்டங்களைவிட 10 மடங்கு வரை குறைந்த செலவில் செயல்படுத்த முடியும்.
இருப்பினும், விஞ்ஞானிகள் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். இதை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதே அது. எல்லா லியானாக்களையும் அனைத்து காடுகளிலிருந்தும் அகற்ற வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. ஆரோக்கியமான இயற்கைக் காடுகளில் இந்தக் கொடிகள் உயிரியல் சமநிலைக்கு மிகவும் அவசியமானவை. காடு ஏற்கனவே மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டு, கொடிகள் அளவுக்கு அதிகமாக பரவியுள்ள பகுதிகளில் மட்டுமே இந்த முறை பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு உலகம் முழுவதும் காடுகளை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு புதிய திசையை காட்டக்கூடும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் சேதமடைந்த வெப்பமண்டலக் காடுகளை குறைந்த செலவில் மீட்டெடுக்க இந்த அணுகுமுறை பயன்படலாம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், அதிக தொழிலாளர்கள் தேவைப்படுவதால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
பல ஆண்டுகளாக "அதிக மரங்கள் நடுவதே தீர்வு" என்ற எண்ணமே உலகம் முழுவதும் நிலவியது. ஆனால் இந்த புதிய ஆய்வு, சில நேரங்களில் இயற்கை ஏற்கனவே தனது வேலையைச் செய்து கொண்டிருக்கிறது; நாம் செய்ய வேண்டியது, அதன் வளர்ச்சியைத் தடுக்கின்ற தடைகளை மட்டும் அகற்றுவதுதான் என்பதை நினைவூட்டுகிறது.
காலநிலை மாற்றம், வன அழிவு மற்றும் உயிரினப் பன்மை இழப்பு போன்ற உலகளாவிய சவால்கள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், குறைந்த செலவில் அதிக பலனை அளிக்கும் இத்தகைய அறிவியல் தீர்வுகள் எதிர்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களில் முக்கிய பங்காற்றக்கூடும். சில நேரங்களில், ஒரு புதிய காடை உருவாக்குவதைவிட, ஏற்கனவே உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் ஒரு காடுக்கு சுவாசிக்க இடமளிப்பதே மிகப் பெரிய பாதுகாப்பாக மாறுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்