இந்தியன் 2 - க்கு தயாராகி வரும் காஜல் அகர்வால்! குதிரையில் சவாரி செய்த வீடியோ வைரல்!!!

தாய்மைக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், நடிப்பில் முழு வீச்சில் களமிறங்க தயாராகி வருகிறார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 - க்கு தயாராகி வரும் காஜல் அகர்வால்! குதிரையில் சவாரி செய்த வீடியோ வைரல்!!!

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு திரையுலகிலும், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் காஜல் அகர்வால். “பழனி” என்ற படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான காஜல் அகர்வால், தனக்கென்று பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ளார். அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால், தனது உச்சக்காலத்தில், அதாவது 2020ம் ஆண்டு, பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தாண்டு, தனது முதல் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றார். ‘நீல் கிச்சுலு’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்து தற்போது நான்கு மாதங்கள் நிரைவடைந்தன, இதனைத் தொடர்ந்து, எப்போதும் தனது ‘ஃபிசிக்கில்’ கவனம் செலுத்தி வரும் காஜல், குழந்தை பிறக்கும் வரை கூட, பல வகையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் உடற்பயிற்சியில் களமிறங்கியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட காஜல், தனது நான்கு மாத ‘போஸ்ட்- பார்ட்டம்’ நேரத்தை உடற்பயிற்சி செய்து சரிகட்டி வருவதாக கூறியுள்ளார். அந்த பதிவில், “முதலில் இருந்து தொடங்குவது போன்ற நிலை எனக்கு வரும் என நான் சிறிதளவும் நினைத்து பார்த்தது இல்லை. நான் நீண்ட நேரம் வரை கூட உடற்பயிற்சி செய்த பிறகு கூட, ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்திருக்கிறேன். ஆனால், தற்போது, இந்த குதிரை மீது ஏறுவது கூட ஒரு பெரிய காரியமாக தெரிகிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, குழந்தை பிறந்த பிறகு, தனது பழைய நிலைக்கு மீண்டும் திரும்புவது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும், தற்காப்பு கலைகளின் பயிற்சி போது, தனது உடல் தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எழுதியிருக்கிறார்.

பின், பெண்கள் தங்களது உடலைப் பற்றி நினைத்து கவலையில் இல்லாமல், மீண்டெழ வேண்டும் என கூறும் வகையில், “நமது உடல்கள் மாறலாம், மாறாமலும் இருக்கலாம். ஆனால், நமது ஆர்வமும், வெறியும் மாறவே மாறாது. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில் தான் எல்லாமே இருக்கிறது.” என எழுதியிருந்தார்.

எப்போதும், பெண்களுக்கு ஒரு முன்னொடியாக இருக்கும் வகையில் பதிவுகள் போட்டு வரும் காஜல் அகர்வாலின் இந்த பதிவு, ரசிகர்களுக்கு பெரும் குஷியைத் தந்துள்ளது. இதோடு இல்லாமல், மேலும்,”இந்திய-2 படத்திற்காக தயாராகி வருவதாகவும், புது புது திறன்களைக் கற்று வருவதாகவும்” கூறி பெருமிதம் கொண்டார் அவர்.

இதனைத் தொடர்ந்து, நெட்டிசன்கள், அவரை ஆதரிக்கும் வகையில், வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். மேலும், அவர் பலருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாகவும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com