
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் விரைவான வர்த்தக (quick commerce) சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, இனி டெலிவரி கட்டணங்கள் மீது 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்த வேண்டும். மத்திய ஜி.எஸ்.டி சட்டத்தின் பிரிவு 9(5) இன் கீழ், இந்த டெலிவரி கட்டணங்களும் வரிவிதிப்புக்கு உட்பட்டவை என ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு உறுதிப்படுத்தினார். இந்த புதிய விதி செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பினால், ஒரு ஆர்டருக்கான செலவு பெரிய அளவில் இல்லை என்றாலும், பல கோடி ஆர்டர்கள் வரும்போது இந்த தாக்கம் மிக அதிகமாக இருக்கும். பன்னாட்டு முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி, ஒரு ஆர்டருக்கு சொமேட்டோ (Zomato) நிறுவனத்திற்கு சுமார் ₹2 வரையும், ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்திற்கு சுமார் ₹2.6 வரையும் கூடுதல் சுமை ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இது குறித்து கூறுகையில், "எங்கள் கணக்கீட்டின்படி, சொமேட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி கட்டணம் ஒரு ஆர்டருக்கு சுமார் ₹11 முதல் ₹12 வரை உள்ளது. இதனால், ஒரு ஆர்டருக்கு தோராயமாக ₹2 வரிப் பாதிப்பு ஏற்படும்" என்று தெரிவித்துள்ளது. அதேபோல், "ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி கட்டணம் ஒரு ஆர்டருக்கு சுமார் ₹14.5 என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். இதனால், ஒரு ஆர்டருக்கு ₹2.6 என்ற அளவில் வரிப் பாதிப்பு ஏற்படக்கூடும்" என்றும் கூறியுள்ளது.
ஸ்விக்கி நிறுவனத்தின் விரைவான வர்த்தக சேவையான இன்ஸ்டாமார்ட் (Instamart), அதன் சராசரி டெலிவரி கட்டணம் சுமார் ₹4 என்பதால், அதன் மீது ஏற்படும் தாக்கம் குறைவாக, அதாவது ஒரு ஆர்டருக்கு சுமார் ₹0.8 என்று இருக்கலாம்.
ஆனால், சொமேட்டோ-வின் விரைவான வர்த்தக தளமான பிளிங்கிட் (Blinkit) இந்த புதிய வரிவிதிப்பால் பெரிதாகப் பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி கட்டணங்கள் ஏற்கனவே அதன் வருவாயில் சேர்க்கப்பட்டு, அதற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால், அவர்களுக்கு இந்த புதிய விதி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த புதிய வரி விதிப்புக்கான முக்கிய காரணம், ஜி.எஸ்.டி சட்டத்தில் உள்ள ஒரு loophole-ஐ மறைப்பதற்கு தான் என்று கூறப்படுகிறது. இதுவரை, டெலிவரி நிறுவனங்கள் டெலிவரி கட்டணங்களை வருவாயாகக் கணக்கிடாமல், வாடிக்கையாளரிடமிருந்து பெற்று, டெலிவரி செய்பவர்களுக்குக் கொடுக்கும் ஒரு "செலவினமாக" (pass-through expenses) காண்பித்து, அதற்கு வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்தன.
ஆனால், செப்டம்பர் 22 முதல் அமலாகும் இந்த புதிய அறிவிப்பு, அந்த வேறுபாட்டை நீக்கிவிட்டது. இனிமேல், டெலிவரி கட்டணங்களும் நிறுவனத்தின் வருவாயாகவே கருதப்படும். இதன் விளைவாக, இந்த கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.