மழைவளம் அருளும் குன்னூர் தந்தி மாரியம்மன்

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் கண் திருஷ்டியை போக்கும் அம்மன் ஆலயத்தை பற்றியும் அக்கோயிலில் நிகழ்ந்த தெய்வீக சம்பவங்கள் குறித்து காணலாம்…
kunnur thandhi mariyamman
kunnur thandhi mariyammanAdmin
Published on
Updated on
2 min read

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் குன்னூரில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே சிறுமியின் உருவில் ஊஞ்சலாடிய அம்மன், தந்தி மாரியம்மன் என்ற பெயரோடு சுயம்புவாய் கோயில் கொண்டு காட்சியளிக்கிறாள்.

உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் குன்னூரில் கோவில் கொண்டிருக்கும் இந்த அம்மனை வணங்கினால், சகல கண் திருஷ்டிகளும் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஆண்டாண்டுகளாய் இருந்து வரும் நம்பிக்கையாகும்

உலகையாளும் பராசக்தி, உதகை மற்றும் குன்னூர் மக்களின் துயர்நீக்கும் தேவியாக விளங்குகிறாள்

ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் இந்த அம்மனை வணங்கி வருடம்தோறும் விழாவெடுத்து கொண்டாடி வருவது சிறப்பக்குரிய சம்பவம் ஆகும்.

குளிர்ந்த இந்த குன்னூர் பகுதி எப்பொழுதெல்லாம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த அன்னையானவள் மழையை பொழியச் செய்து ஈர பூமியாகவே தன் இடத்தை காத்து வருகிறாள்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் சீரமைக்கப்பட்ட இந்த குன்னூர் வனப்பகுதியில் ஒரு நாள் அந்த அதிசய நிகழ்வு நடந்தேறியது…

ஆங்கிலேய அதிகாரிகள் பயன்படுத்தி வந்த குதிரைகளையும், சாரட் வண்டிகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலாளி, ஓர் இரவில், வனத்தின் நடுவே தேக்கு மரத்தில் சிறுமி ஒருவர் வெண்ணிற ஆடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பதை கண்டார். இருளை கிழித்து பிரகாசமாய் தோன்றிய அந்த சிறுமியின் தெய்வீகச் சிரிப்பொலியில், சிலிர்த்துப் போன காவலாளி இது குறித்து கிராம மக்களிடம் தெரிவிக்கிறார்.

மறுநாள் காவலாளியின் கண்களுக்கு மட்டும் தெரிந்த அந்த காட்சியினை, ஊர் மக்களுக்கும் கண்டு அதிசயத்து நிற்கின்றனர்.

ஆடுகின்ற ஊஞ்சல் அருகே ஊர் மக்கள் சென்ற போது அங்கு சிறுமி மறைந்து ஒரு சுயம்பு அம்மன் சிலை மட்டுமே கிடைத்துள்ளது.

சிம்ம வாகன ரூபினி, சிறுமியாய் காட்சி தந்ததை கண்டு பிரமித்து போன மக்கள், அந்த இடத்திலேயே அவளுக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர்.

அந்தக் கோயிலின் அருகே ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட தந்தி கம்பம் ஓர் அடையாளமாய் இருந்ததனால் தந்தி மாரியம்மன் என்ற பெயரோடு இன்றளவும் அருள் நிறைந்த ஆலயமாக காட்சி தருகிறது

கருவறையில் கிழக்கு நோக்கி நின்ற கோளத்தில் காட்சி தரும் தந்தி மாரியம்மன், வலது திருக்கரங்களில் சூலம் மற்றும் கத்தியையும், இடது திருக்கரங்களில் அங்குசம், குங்கும சிமிழும் ஏந்தி காட்சியளிக்கிறார்.

சிறுமியாய் வந்து பலருக்கு பெருவாழ்வு அளித்து வரும் அன்னையின் கருவறையில், யானை தந்தத்தால் எடுக்கப்பட்ட மண், மசினகுடி காளை கொம்பு மண், கேரள எல்லையில் இருந்து ஏர்க்கலப்பையால் எடுக்கப்பட்ட மண், பாட்டவயல் மண், மாயாற்று நண்டின் இருப்பிட மண், பொக்காபுரத்தில் நாகபுற்று மண், மனித கால்சுவடு படாத ஆற்று மண் ஆகியவைகள் அன்னையின் பீடத்துக்குள் வைக்கப்பட்டு புனிதத்துடன் நிரப்பபட்டுள்ளது

பக்தர்கள் தங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா நிறைவேறாதா என்ற பூ வாங்கும் நிகழ்ச்சி இக்கோயிலின் சிறப்பிக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

இக்கோயில், அம்மனை பக்தர்கள் தரிசித்து நிற்கும்போது அன்னை அவள் மேனியில் இருந்து வெள்ளை பூ விழுந்தால் நினைத்த காரியம் தாமதம் ஆகும் என்றும், சிவப்பு பூ வந்தால் காரியம் நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

கண் திருஷ்டி பட்டாலே படமெடுத்து ஆடும் பாம்பு கூட செத்துவிடும் என்பதை போல திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக இக்கோயிலில் வழிபாடுகள் நடத்துகின்றனர்.

இங்கு உலகில் வேறு எங்கும் இல்லாதபடி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா 40 நாட்கள் நடைபெறுவதோடு பிரமிக்கதக்க தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

28 அடி நீளம் 9 அடி அகல குண்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆவேசத்துடன் தீயில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி காண்போரை சிலிர்ப்படைய செய்கிறது

நாள்தோறும் அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, அருகில் உள்ள தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை நடத்தப்படுவதோடு அம்மன் ஊஞ்சல் ஆடிய மரமும் கோயில் அருகே கம்பீரமாய் காட்சித்தருகிறது

கல்வியில் மேன்மை பெற, பதவி உயர்வு திருமணத்தடை நீங்க , காலம் தவறாமல் மழை பொழிய பக்தர்கள் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வதோடு பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

இக்கோயிலில் நடக்கும் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் குன்னூரைச் சேர்ந்த ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலில் பூஜை செய்வதோடு தீமித்திருவிழா, தேர் திருவிழா, முத்துப் பல்லக்கு ஆகியவைகளைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் இங்கு குவிந்து வருகின்றனர்

சிறுமியாய் ஊஞ்சலாடி காட்சி தந்த தந்தி மாரியம்மன், மழைவளம் தருவதோடு மக்களின் மனக்குறைகளையும் தீர்தருளுகிறாள்.

மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் ராகவனுடன் கலைமாமணி நந்தகுமார்…

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com