
48 நாட்கள் தூய்மையான விரதம் மேற்கொண்டு இக்கோயிலில் உள்ள நரசிம்மரை வணங்கி வழிபட்டால் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இழந்த செல்வங்களையும் பதவிகளையும் பெற முடியும் என்பது ஐதீகமாக உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு பழமையும் பெருமையும் மிக்க கோயில், விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகில் பூவரசன்குப்பம் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் திருகோவில் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது.
நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த தலம் ஆந்திராவில் ‘அகோபிலம்” என்றும், முனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன்குப்பம் என்பது இக்கோயிலின் பெருமையாகும்.
மனித மற்றும் மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் மற்ற தலங்களில் உக்கிர உருவத்தோடு காட்சி தரும் நிலையில், இக்கோயிலில் சப்தரிஷிகளான அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களுக்காக சாந்த சொரூபியாக, தம்பதியர் சமேதராக நான்கு கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார்.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயிலின் கருவறைக்கு முன்னால் கொடிமரமும், அதன் முன் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளதோடு கொடிமரத்தின் முன்னே வீற்றிருக்கும் கருடாழ்வார், சன்னதியின் கருவறையை நோக்கி கை கூப்பியவாறு காட்சி தருகிறார்.
பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்ம சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோயில், பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோயில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளது.
இவைகளில் நரசிம்மர் கோயில், சிங்கிரி உக்ரநரசிம்மர்கோயில், மற்றும் பரிக்கல் ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மர் ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் நிலையில் இவை மூன்றையும் ஒரேநாளில் தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இக்கோயிலில் லட்சுமி தேவியான அமிர்தவல்லி தாயார், ஆண்டாள் தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கும் நிலையில் பிரகாரத்தினுள் இராமானுஜர், நாகர் சன்னதியும் வாயு மூலையில் அனுமன் சந்நிதியும், வடக்கே வரதராஜப்பெருமாள், தென்கிழக்கே தும்பிக்கை ஆண்டவர் விநாயகர் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
இங்கு ஆதிகாலத்தில் நரசிம்மர் தூணிலிருந்து தோன்றியதால், ஒரு தூணையே இங்குள்ள பக்தர்கள் நரசிம்மராக வழிபாடு செய்து வந்த நிலையில், பின்னாளில் பல்லவர்கள் நரசிம்மருக்குக் கோயில் கட்டி சிலை பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறுகள் கூற்கின்றன. இதன் காரணமாகவே அந்த தூண் தற்போது ஹோம மண்டபம் பகுதியில் வைத்து வேதாச்சார்யாரகள் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஏழாம் நூற்றாண்டில், முதல் பல்லவ மன்னன், நரஹரி என்ற முனிவரின் சாபத்தால் உடல் முழுவதும் அழுகி, சீழ் பிடித்து, புழுக்கள் உண்டாகி நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் இறுதியில் ஒரு பூவரசம் மரத்தின் கீழ் தான் செய்த தவறுகளுக்காக கண்ணீர் சிந்தி தவமிருந்தான்.
அப்போது அந்தப்பூவரச மரத்திலிருந்து விழுந்த ஓர் இலையில், நரசிம்ம மூர்த்தியின் உருவம் இருப்பதை கண்டு மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.அப்போது அங்கு ஒலித்த அசரிரியில் நீ.. நரசிம்ம மூர்த்திக்கு இத்தலத்தில் கோயில் கட்டி வழிபடுவாயாக என்று கூற, அதனை கேட்ட மன்னன் இந்த கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
அதேபோல விஜயநகர சாம்ராஜ்ய அரசன் ஒருவன், பகைவரின் சூழ்ச்சியால் ராஜ்ஜியத்தை இழந்து, எதிரிகளிடமிருந்து தப்பித்து இக்கோயிலில் நுழைந்துள்ளார்.
அப்போது நரசிம்ம பெருமாளை வணங்கி தன்னை காக்கும் படி வேண்டினார். அரசரின் அபாயத்தை நீக்கிய நரசிம்மர் மீண்டும் அவனுக்கு இழந்த பதவிகளையும் செல்வங்களையும் அளித்ததாக ஓலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
இக்கோயிலில் வேறு எங்கும் இல்லாதபடி, ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும்.
இங்கு வீற்றிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்குவதோடு செல்வம் பெருகும் என்றும் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவை கிட்டுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
பழமையும் பெருமையும் நிறைந்த இக்கோயிலில் லட்சுமியுடன் சகல ஐஸ்வர்யங்களை தரும் நரசிம்மரை வணங்குவோம் குறைவின்றி வாழ்வோம்.
மலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக விழுப்புரம் செய்தியாளர் மானஸ்ராஜுடன் கலைமாமணி நந்தகுமார்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்