
2026 FIFA உலகக் கோப்பை, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய மூணு நாடுகளில் நடக்கப் போகுது. இது இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு நிகழ்வாக இருக்கும். மொத்தம் 48 அணிகள், 104 போட்டிகள், 16 நகரங்களில் நடக்கப் போகுது. ஆனா, இந்த பிரம்மாண்டத்தோடு ஒரு பெரிய பிரச்சினையும் வருது – இது உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய நிகழ்வாக இருக்கும்னு ஒரு அறிக்கை எச்சரிக்குது.
Scientists for Global Responsibility (SGR), Environmental Defence Fund, மற்றும் Sport for Climate Action Network ஆகியவை இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை, இந்த உலகக் கோப்பையால் 90 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடு (CO2e) உமிழப்படும்னு கணக்கிட்டிருக்கு. இது, கத்தார் 2022 உலகக் கோப்பையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாம்!
இந்த உலகக் கோப்பையோட மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை, விமான பயணங்களும், அதிகரிச்ச போட்டிகளின் எண்ணிக்கையும். முன்னாடி 32 அணிகளாக இருந்த உலகக் கோப்பை, இப்போ 48 அணிகளாக விரிவடைஞ்சிருக்கு. இதனால, மொத்தம் 104 போட்டிகள் நடக்கும், இது முந்தைய தொடர்களை விட 60% அதிகம்.
மூணு நாடுகளில், 16 நகரங்களில் இந்த போட்டிகள் நடக்குறதால, வீரர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் எல்லாரும் நிறைய விமான பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த விமான பயணங்கள் தான் 85% கார்பன் உமிழ்வுக்கு காரணமாக இருக்கும்னு அறிக்கை சொல்லுது. உதாரணமா, மியாமியிலிருந்து வான்கூவருக்கு பயணிக்கிறது சுமார் 4,500 கி.மீ தூரம். இப்படி நீண்ட தூர பயணங்கள், கார்பன் உமிழ்வை பல மடங்கு அதிகரிக்குது.
மேலும், FIFA-வின் ஸ்பான்சராக சவுதி அரேபியாவின் Aramco எண்ணெய் நிறுவனம் இருப்பது, மேலும் 30 மில்லியன் டன் CO2e உமிழ்வை உருவாக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்குறாங்க. “ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்காக இவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் விலையை கொடுக்கணுமா?”னு பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
FIFA, 2030-க்குள் 50% கார்பன் உமிழ்வை குறைப்போம், 2040-க்குள் நடுநிலை (net-zero) அடையறோம்னு உறுதியளிச்சிருக்கு. ஆனா, இந்த உறுதிமொழிகள் நம்பகத்தன்மையை இழந்திருக்கு. 2022 கத்தார் உலகக் கோப்பையை “முழுமையாக கார்பன் நடுநிலை”னு FIFA சொன்னது, பல சுற்றுச்சூழல் அமைப்புகளால் பச்சை மோசடி (greenwashing)னு விமர்சிக்கப்பட்டது.
கத்தாரில் புது மைதானங்கள் கட்டுவதற்கும், குளிரூட்டல் அமைப்புகளுக்கும் செலவான ஆற்றல், உமிழ்வை பல மடங்கு அதிகரிச்சது. ஒரு அறிக்கையில், FIFA-வின் கணக்கீடுகள் உண்மையை விட எட்டு மடங்கு குறைவாக இருந்ததாக Carbon Market Watch குற்றம்சாட்டியது.
2026 உலகக் கோப்பையில், புது மைதானங்கள் கட்டப்படாததால், கட்டுமான உமிழ்வு குறையலாம். ஆனா, பயண உமிழ்வு இந்த நன்மையை மறைக்குது. மூணு நாடுகளின் ஆரம்ப மதிப்பீட்டில், 3.6 மில்லியன் டன் CO2e உமிழப்படும்னு சொல்லப்பட்டது, ஆனா இப்போ 9 மில்லியன் டன்னு கணக்கிடப்பட்டிருக்கு. இது, சராசரியாக 65 லட்சம் பிரிட்டிஷ் கார்கள் ஒரு வருடம் ஓடுவதற்கு சமமாம்!
2026 உலகக் கோப்பையில் மற்றொரு பெரிய கவலை, வெப்பநிலை. இந்த தொடர் ஜூன்-ஜூலை மாதங்களில் நடக்குது, அப்போ அமெரிக்காவின் பல நகரங்களில் வெப்பநிலை 38°C-ஐ தாண்டுது. உதாரணமா, பீனிக்ஸில் 48°C பதிவாகியிருக்கு, டெக்ஸாஸில் 27 நாட்கள் தொடர்ந்து 38°C-க்கு மேல் இருந்திருக்கு. 14 இடங்களில் Wet Bulb Globe Temperature (WBGT) 28°C-ஐ தாண்டுது, இது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு “எக்ஸ்ட்ரீம் காஷன்” நிலையை காட்டுது.
இதற்கு முன், 2022 கத்தார் உலகக் கோப்பை வெப்பத்தை தவிர்க்க நவம்பர்-டிசம்பருக்கு மாற்றப்பட்டது. ஆனா, 2026-ல் இப்படி மாற்ற முடியாது, ஏன்னா குளிர்காலத்தில் கனடா, டொராண்டோ மாதிரியான இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு கீழே போகுது. FIFA, “காலநிலை கட்டுப்பாடு” மைதானங்களையும், நீர் இடைவேளைகளையும் பயன்படுத்த திட்டமிடுது, ஆனா இது போதுமானதாக இருக்குமான்னு சந்தேகம் இருக்கு. “வெயில்ல விளையாடுறது வீரர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஆபத்து”னு விஞ்ஞானிகள் எச்சரிக்குறாங்க.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், FIFA-வின் இந்த விரிவாக்கத்தை கடுமையாக விமர்சிக்குறாங்க. “FIFA-வுக்கு காலநிலை பிரச்சினை பற்றி எந்த அக்கறையும் இல்லை”னு Scientists for Global Responsibility-யைச் சேர்ந்த ஆண்ட்ரூ சிம்ஸ் குற்றம்சாட்டுறார். மேலும், ஒரு ஆராய்ச்சியாளரான டிம் வால்டர்ஸ், இந்த உலகக் கோப்பையால் 70 மில்லியன் டன் CO2e உமிழப்படலாம், இது சுமார் 70,000 முன்கூட்டிய இறப்புகளுக்கு வழிவகுக்கும்னு எச்சரிக்குறார். இது, ஆரம்ப மதிப்பீட்டை விட 18 மடங்கு அதிகமாம்!
Fossil Free Football மற்றும் Pledgeball மாதிரியான அமைப்புகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துறாங்க. 81% கால்பந்து ரசிகர்கள், காலநிலை பிரச்சினை குறித்து கவலைப்படுறதாகவும், தங்கள் கிளப்கள் இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கணும்னு விரும்புறதாகவும் ஒரு ஆய்வு காட்டுது.
2026 FIFA உலகக் கோப்பை, விளையாட்டு உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கலாம், ஆனா அதோட சுற்றுச்சூழல் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.