

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கரின் மகள் அனயா பாங்கர். இவர் ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணியில் கிரிக்கெட் விளையாட அம்மாநில கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்குத் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மரிசான் கப் (Marizanne Kapp) கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது; பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளை விளையாட அனுமதிக்கவே கூடாது" என்று மரிசான் கப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர், இந்த விவகாரத்தில் பகிரங்கமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்காகப் பத்தாண்டுக்காலமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தடம் பதித்து வருபவர் மரிசான் கப். இவர் உலக மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான மும்பை இளையோர் கிரிக்கெட் தொடர்களில் தொடக்க ஆட்டக்காரராகவும், ஆல்ரவுண்டராகவும் விளையாடியவர் அனயா. பிறப்பால் ஆணாகப் பிறந்த இவர், கடந்த 2023-ம் ஆண்டு ஹார்மோன் மாற்று சிகிச்சையைத் (HRT) தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து 2026-ல் பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு திருநங்கையாகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அனயா, அங்குள்ள உள்ளூர் மற்றும் 'பிரீமியர்' பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2027 மார்ச் மாதம் முதல் உயர்மட்ட (Elite) மகளிர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் வாய்ப்பும் அவருக்குத் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அனயா பேசுகையில், "எனக்கான கதவை மட்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திறந்து வைத்துள்ளது. நேரடியாக எந்த அணியிலும் எனக்கு இடம் வழங்கிவிடவில்லை. 2027-க்குப் பிறகு உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் நான் விளையாட வேண்டுமென்றால், அதற்கான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) ஹார்மோன் அளவுக்கான விதிகளை நான் முறையாகக் கடக்க வேண்டும். களத்தில் கடுமையாக உழைத்து, திறமையை நிரூபித்து மட்டுமே அணியில் இடம் பிடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
அனயாவின் இந்த முயற்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-ல் கொண்டு வந்த விதிகளின்படி, ஆண்களுக்கான பூப்படைதல் (Male Puberty) பருவத்தைக் கடந்த திருநங்கைகள், சர்வதேசப் பெண்கள் கிரிக்கெட்டில் விளையாடத் தடையும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் உள்ளூர் போட்டி விதிகளில் சில விலக்குகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே அனயாவுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முடிவு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் புதிய விவாதத்தைக் கிளப்பிதான் உள்ளது. அனயாவின் கனவுக்கு ஆஸ்திரேலிய வாரியம் வழிவகுத்தாலும், மரிசான் கப் போன்ற சர்வதேச வீராங்கனைகளின் இந்த வெளிப்படையான எதிர்ப்பு, 'பெண்கள் கிரிக்கெட்டில் திருநங்கைகளின் பங்கேற்பு' குறித்த விவாதத்தை உலக அளவில் மேலும் சூடாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்