haunted hostel Maharashtra 
க்ரைம்

"விடுதியில் பேய் நடமாட்டமா?" - கொலுசு சத்தம்.. வினோத நடவடிக்கையால் 600 மாணவர்கள் வெளியேறிய சம்பவம்! பீதியில் உறைந்த கிராம மக்கள்

'பேய் விடுதி' என்று கூறி சுமார் 600 மாணவர்கள் சில நாட்களுக்குள் வெளியேறிதாக கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இயங்கி வந்த அரசு விடுதியில், சில சிறுமிகளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி, சுமார் 600 பழங்குடியின மாணவர்கள் வெளியேறியதை அடுத்து, அதிகாரிகள் ஒரு அசாதாரணமான நெருக்கடியைச் சந்தித்து வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 22 அன்று நான்கு சிறுமிகள் கட்டுக்கடங்காமல் அழுது சிரித்து விசித்திரமாக நடந்துகொள்ளத் தொடங்கியதை அடுத்து இந்த சம்பவம் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் "மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்" என அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

மும்பையிலிருந்து 700 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில், வடக்கு மகாராஷ்டிராவில் பழங்குடியினர் அதிகம் இருக்கும் மெல்காட் பகுதியின் சிகல்தாரா தாலுக்காவில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் உறைவிடப் பள்ளியில் 810 சிறுவர் சிறுமியர் தங்கி படித்து வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு, சிறுமிகளுக்குப் பேய் பிடித்திருப்பதாக வதந்தி விரைவில் பரவியதை அடுத்து, பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்படும் அந்த விடுதியில் இருந்து 'பேய் விடுதி' என்று கூறி சுமார் 600 மாணவர்கள் சில நாட்களுக்குள் வெளியேறிதாக கூறப்படுகிறது. விடுதி வட்டாரங்களின்படி, சில மாணவிகள் கொலுசுகளின் ஒலி அதிக சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளனர்.

பழங்குடியினர் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், சுகாதார நிபுணர்கள் குழு ஒன்று டோமா உறைவிடப் பள்ளியைப் பார்வையிட்டதாகக் கூறியுள்ளார். "இந்த அறிகுறிகளுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மன அழுத்தத்துடன் தொடர்புடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிஸ்டீரியா போன்ற ஒரு நிலையாக இருக்கலாம்," என்று அந்த அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட உளவியல் அறிக்கை ஒன்றின்படி, சில சிறுமிகளின் அசாதாரண நடத்தைக்குப் பிறகு பல்வேறு யூகங்கள் பரவத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களுக்கும் இதே போன்ற மனநல அறிகுறிகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. ஆசிரமப் பள்ளி அமைந்துள்ள இடத்தில், ஆவிகள் வசித்து வந்த ஒரு 'மகுவா' மரம் இருந்ததாக மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. பள்ளி நிர்வாகம் அந்த மரத்தை வெட்டிவிட்டதால், ஆவிகள் கோபமடைந்து மாணவர்களைத் தொந்தரவு செய்து வந்ததாக அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கூறப்பட்ட மற்றொரு காரணம் என்னவென்றால், ஆசிரமப் பள்ளிக்குப் பின்புறம் இருந்த பழங்குடியின மக்களின் தெய்வக் கோயில், பள்ளியின் வடிகால் கால்வாயால் பாதிக்கப்பட்டு அல்லது அத்துமீறப்பட்டதால், தெய்வம் அதிருப்தி அடைத்தால் இவாறு நடப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இது மட்டுமின்றி பள்ளிக்கு அருகிலுள்ள வயல் ஒன்றில் பழங்குடி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும், அவரது ஆவி பேயாக மாறியதாகவும் மூன்றாவது காரணமாகக் கூறப்படுகிறது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அசாதாரண சூழ்நிலைக்கு மூடநம்பிக்கை, பயம், மன அழுத்தம் மற்றும் ஆவிகள் பற்றிய உள்ளூர் நம்பிக்கைகளே காரணம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இது போன்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை ஒழிப்பதற்காகப் பணியாற்றும் மகாராஷ்டிர அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் (மூடநம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியங்களுக்கு எதிராகப் போராட துவங்கப்பட்ட ஒரு சமூக நல அமைப்பாகும்) மூத்த நிர்வாகிகள் மாணவர்களைச் சந்தித்து அறிவுரை வழங்கியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கு ஆளாகாமல், இந்தச் சம்பவத்தை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் வித்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அமராவதி நாடாளுமன்ற உறுப்பினர் பல்வந்த் வான்கடேவும், மாணவர்கள் பயப்படாமல் வகுப்புகளுக்கு வரத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தலைமை ஆசிரியர் சஞ்சய் சௌத்ரி தெரிவித்துள்ளார். "சிலர் பள்ளிக்கு திரும்பிவிட்டனர்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்