

நாடுமுழுக்க பரபரப்பாக பேசப்பட்ட டிவிஷா சர்மா கொலை வழக்கில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. போபாலில் மே 12 அன்று இரவு 9:36 மணிக்கு, டிவிஷா ஷர்மா தனது நாத்தனாருக்கு ஒரு திகிலூட்டும் வாட்ஸ்அப் செய்தியை அனுப்பியுள்ளார், அதில் "அவனுடைய மனைவியின் மிச்சத்தை எடுத்துச் செல்லச் சொல். ஆனால் நாளைக்கு. என்னை இப்போது நிம்மதியாகச் சாக விடுங்கள்" என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
சிபிஐ மேற்கோள் காட்டிய சிசிடிவி காட்சிகளின்படி, இந்த் குறுஞ்செய்தி அனுப்பிய நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, 34 வயதான டிவிஷா சர்மா தனது போபால் வீட்டின் தரைத்தளத்திலிருந்து தனியாக மாடிப்படி ஏறி, மொட்டை மாடியை நோக்கிச் செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இரவு 9:41 மணிக்கு, டிவிஷா தன் தந்தையை அழைத்துள்ளார். அப்போது வர டிவிஷா அழுதுகொண்டிருந்துள்ளார். அவர் தனது தந்தையிடம் தன் கணவர் சமர்த் சிங் "மிகவும் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும்" மாறிவிட்டதாகவும், தனக்குப் பயமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்றும் டிவிஷா அவரது தந்தையிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இரவு சுமார் 10:05 மணிக்கு, டிவிஷா தன் தாயை அழைத்து, சமர்த் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும் மாறிவிட்டதை மீண்டும் கூறியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இரவு 10:23 மணியளவில், சமர்த் சிங்கும் அவரது தாய் கிரிபாலா சிங்கும் மாடியை நோக்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் டிவிஷா மொட்டைமாடியில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டு, போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு இரவு சுமார் 10:55 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14 அன்று தாக்கல் செய்யப்பட்ட, டிவிஷா ஷர்மா மரண வழக்கின் சிபிஐ-யின் 30 பக்க குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக இந்த நிமிடத்திற்கு நிமிடம் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குற்றப்பத்திரிகையில், டிவிஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரது தாயாரும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோர், டிவிஷா தொடர்ச்சியாக மனரீதியான கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது, பாரதிய நியாய சம்ஹிதாவின் 85, 108 மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் சிபிஐ அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெறும் ஐந்து மாதங்கள் மட்டுமே நீடித்த ஒரு திருமண வாழ்க்கைக்குள், பல மாதங்களாக தொடர்ந்த உளவியல் ரீதியான துன்புறுத்தல், அதனை விவரிக்கும் வாட்ஸ்அப் செய்திகள், தொலைபேசி அழைப்புகள், குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், மருத்துவர்கள், ஆலோசனை அமர்வுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் நிதிசார்ந்த குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் மூலம் டிவிஷா அனுபவித்த கொடுமைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு படிப்படியாக வந்துகொண்டிருக்கிறது.
மேலும், இதில் மிகவும் வியக்கத்தக்க விஷயம் என்னவெனில், டிவிஷா தான் இறந்த நாள் அன்று காலையில், போபாலில் இருந்து தனது பெற்றோரின் வீட்டிற்கு மீண்டும் செல்வதற்காக ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார்.
சிபிஐயின் கூற்றுப்படி, கார்ப்பரேட் வேலைக்கும் டிவிஷா வருவதற்கு முன்பு நடிகையாகப் பணியாற்றிய போது, 2025 பிப்ரவரியில் 'ஆன்லைன் டேட்டிங் செயலி' மூலம் சமர்த் சிங்கைச் சந்தித்துள்ளார். பின்னர் அவர்களின் இந்த காதலானது அவர்கள் அதே ஆண்டு டிசம்பர் 9 அன்று திருமணத்தில் சென்று முடிவடைந்தது.
திருமணத்திற்கு முன்பு டிவிஷா சமர்த்திடம் தெரிவித்திருந்த அவரது முந்தைய காதல் உறவுகள் குறித்து, சமர்த் திருமணத்திற்கு பின்பு தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக இழிவான வார்த்தைகளையும் டிவிஷாவை நோக்கி பயன்படுத்தியதாகவும், கூறப்படுகிறது. மேலும், டிவிஷா தனது கணவரின் நடத்தை குறித்து அவரது மாமியாரிடம் புகார் அளித்தபோதெல்லாம், கிரிபாலா சிங் மீண்டும் மீண்டும் சமர்த்தை தூண்டிவிடுவது போலவும் அல்லது சமரத்திற்கு ஆதரவாக நிற்பதுபோலவும் இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது. மேலும், 2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இந்த தம்பதிகளின் உறவு இன்னும் மோசமடைந்ததாக குற்றப்பத்திரிகை விவரிக்கிறது. மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையுடன் டிவிஷா தங்கியிருந்தபோது, உடனடியாக போபாலுக்குத் திரும்புமாறு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவரை வற்புறுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அதன் பின்னர் டிவிஷா உடனடியாக மார்ச் 24 அன்று போபாலுக்கு திரும்பியுள்ளார்.
அதன் பிறகு கர்ப்பம் டிவிஷா தரித்துள்ளார். ஏப்ரல் 16 அன்று டிவிஷா தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்துள்ளார். சிபிஐயின் கூற்றுப்படி, கர்ப்பம் திட்டமிடப்படாதது என்பதாலும், சமர்த்தின் வன்முறையான நடத்தை என்று அவர் விவரித்த காரணத்தினாலும், கர்ப்பத்தைத் தொடர்வது குறித்து டிவிஷா உறுதியற்ற நிலையில் இருந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 17 அன்று நடந்த வாக்குவாதத்தின் போது, சமர்த் மீண்டும் டிவிஷாவிற்கு எதிராக மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது. அன்று டிவிஷா தனது புகுந்த வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
திருமண தகராறுக்கு இணையாக இவர்களுக்கு பணப் பிரச்சனையும் இருந்துள்ளது. டிவிஷா ஒரு டிமேட் கணக்கு மூலம் பங்குகளில் சுமார் 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சிபிஐயின் கூற்றுப்படி, ஏப்ரல் 7-ம் தேதி டிவிஷாவும் சமர்த்தும் இணைந்து தொடங்கிய ஒரு கூட்டு வங்கிக் கணக்கிற்கு அந்த முதலீட்டை மாற்றுமாறு சமர்த்தும் கிரிபாலாவும் டிவிஷாவை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டிவிஷா அந்தப் பணம் தன் தந்தைக்குச் சொந்தமானது என்று கூறி தர மறுத்துவிட்டதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே 12 அன்று இரவு சுமார் 7:51 மணியளவில், ட்விஷா தனது நாத்தனார் ராஷி அப்ரோலை தொலைபேசியில் அழைத்து, தான் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்ததாக சிபிஐ கூறுகிறது. மேலும், சமர்த் தனது முதலீட்டை சீனப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக, அதை மாற்றுமாறு தன்னை வற்புறுத்தி வருவதாகவும் டிவிஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ஏப்ரல் 30 அன்று, போபாலுக்குத் திரும்பிய பிறகு, அவர் தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில் எழுதிய மெசேஜ்யில், "எல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கிவிட்டதாகவும், வீட்டிற்கு பயணம் செய்துகொண்டிருந்தபோதே தனக்குப் பதட்டத் தாக்குதல் (Panic aatack) ஏற்பட்டதாகவும் டிவிஷா குறிப்பிட்டிருந்தார்.
"என் வாழ்க்கை நரகமாகிவிட்டது, மம்மி" என்று டிவிஷா அவரது தாய்க்கு மெசேஜ் அனுப்பியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
அன்று டிவிஷா ஒரு மனநல மருத்துவரிடமும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கர்ப்பம் குறித்து அவர் சங்கடமாக உணர்வதையும், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அனுபவிப்பதையும் மருத்துவர் கண்டறிந்ததாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அவருக்குப் பதட்டத்தைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, மனநிலை அமைதியானதும் கர்ப்பம் குறித்து முடிவெடுக்குமாறும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மே 6-ம் தேதி, டிவிஷா தனது முந்தைய கார்ப்பரேட் வேலையில் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாக சிபிஐ தரப்பில் கூறபடுகிறது. அதே நாளில், அவர் தனது கர்ப்பத்தைக் கலைப்பதற்கான மருந்தின் முதல் டோஸையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு, மே 7-ம் தேதி அதிகாலையில், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்டு, டிவிஷா தன் தாய்க்குத் தொடர்ச்சியான செய்திகளை அனுப்பியுள்ளார். குற்றப்பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள ஒரு செய்தியில், "அம்மா, தயவுசெய்து என்னை இந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லுங்கள்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சமர்த் இனி தன்னை வேண்டாம் என்று நினைப்பதாகவும், ஒரு வருடமாக தன்னை "சகித்துக்கொண்டிருப்பதாக" அவர் கூறியதாகவும் டிவிஷா தன் தாயிடம் தெரிவித்துள்ளார். குற்றப்பத்திரிகையின்படி, முதல் கருக்கலைப்பு டோஸுக்குப் பிறகு கர்ப்பத்தை மீண்டும் உருவாக்க முடியுமா? என்பதை ஆராயுமாறு மாமியார் கிரிபாலா டிவிஷாவை கேட்டுள்ளார். இதையடுத்து, டிவிஷா மே 7 அன்று தனது மாமியாருடன் இதுகுறித்து அறிய மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த செயல்முறையை மாற்றியமைக்க முடியாது என்று ஒரு மருத்துவர் அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு அவர் டாக்டர் ககோலி ராய் என்ற மற்றொரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டுள்ளனர். அந்தச் சந்திப்பின்போது டிவிஷா "உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்", பதட்டமாகவும், சங்கடமாகவும் இருந்ததாகவும் மருத்துவர் கண்டறிந்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. கர்ப்பத்தைக் கலைக்கும் தனது முடிவால் சமர்த்தும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த கோவத்தில் இருந்துள்ளார்கள் என்றும், கர்ப்பத்தைத் தொடருமாறு அவர்கள் விரும்பியதாகவும் டிவிஷா மருத்துவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கருக்கலைப்பு தொடர்பாக மாமியார் கிரிபாலா டிவிஷாவை மூன்று முறை 'கொலையாளி' என்று அழைத்ததாக தனது நாத்தனாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. மேலும், ராஷி அப்ரோலுக்கு டிவிஷா அனுப்பிய ஒரு செய்தியையும் சிபிஐ பதிவு செய்துள்ளது: "இந்த மனிதன் ஒரு மனநோயாளி. மீண்டும் அதே நடத்தையைத் தொடங்கிவிட்டான்... நான் இப்போது உடைந்து இருக்கிறேன், எனக்கு இங்கே எதிர்காலம் இருப்பதாகத் தெரியவில்லை" என்று அவரது கணவர் குறித்து கூறியுள்ளார்.
மே 8 அன்று, ட்விஷா இரண்டாவது கருக்கலைப்பு டோஸை எடுத்துக்கொண்டுள்ளார். சிபிஐயின் கூற்றுப்படி, அந்த சமயம் அவர் மிகுந்த வலியுடனும் இரத்தப்போக்குடனும் இருந்துள்ளார். ஆனால் சமர்த், டிவிஷா 'நாடகம்' செய்வதாக இரக்கமின்றி குற்றம் சாட்டியதாகவும், அதே சமயம் கிரிபாலா டிவிஷாவை புறக்கணித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
மே 9-ம் தேதிக்குள், புலனாய்வாளர்களால் மேற்கோள் காட்டப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மேலும் மோசமானவையாக மாறியிருந்தன. தான் கலைத்த கர்ப்பம் உண்மையில் சமர்த்துடையதா? என்று கணவர் கேள்வி எழுப்பியதாக டிவிஷா அவரது தாயிடம் வலியுடன் கூறியுள்ளார்.
தன் மாமியார் இந்த விவகாரத்தை நம்பவில்லை என்றும், டிவிஷா கூறியுள்ளார். "எனக்கு இப்போது இங்கே மூச்சுத் திணறுகிறது, அம்மா" என்று டிவிஷா கூறியதாகக் குற்றப்பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
மேலும், டிவிஷா வீட்டில் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதாகவும், அவரது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், அதன் காரணமாக அருகிலுள்ள பூங்காவில் நடக்கும்போது சில சமயங்களில் அவரிடம் பேசுவதாகவும் டிவிஷா புகார் அளித்ததாக, அவரது முன்னாள் முதலாளி அமித் தாஸ் புலனாய்வாளர்களிடம் கூறியதாக சிபிஐ மேலும் தெரிவித்துள்ளது.
டிவிஷா இறப்பதற்கு முந்தைய நாள், மீண்டும் தன் தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தனது மனநிலைக்காகத் தன்மீது பழி சுமத்தப்படுவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்படுவதாகவும் அவர் புகார் அளித்ததாகவும், அதேவேளையில் தனது கணவர் தன்னை உணர்வுப்பூர்வமாகக் கைவிட்டுவிட்டதை யாரும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மே 12, வீட்டை விட்டு வெளியேறும் முயற்சியுடன் தொடங்கியுள்ளது. ராஜஸ்தானின் நசிராபாத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, டிவிஷா தனது தாயை அழைத்து 3,000 ரூபாய் கேட்டதாக சிபிஐ கூறுகிறது. இந்த திருமண உறவைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாகவும், ஆனால் சமர்த் தம்பதியர் ஆலோசனைக்கு வர விரும்பாததால் ஊருக்கு திரும்பி வர விரும்புவதாகவும் டிவிஷா தனது தாயிடமும் நாத்தனாரிடமும் கூறியுள்ளார். பின்னர், டிவிஷாவின் தந்தை 3,000 ரூபாயை அனுப்பியுள்ளார்.
டிவிஷா வீட்டைவிட்டு வெளியேற எண்ணியிருப்பதை அறிந்த பிறகு, சமர்த் ஆலோசனை அமர்வில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டதாக சிபிஐ கூறுகிறது. சமர்த் டிவிஷாவின் நடத்தை குறித்துப் புகார் கூறியதாகவும், தானும் டிவிஷாவும் கஞ்சா உட்கொண்டதாக மருத்துவரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சிபிஐயின் கூற்றுப்படி, அந்த மருத்துவர் சமர்த்திடம், டிவிஷா "கடுமையாக அவதிப்படுகிறார்" என்று கூறி, பொறுமையாகக் கேட்டுத் தன் மனைவிக்கு அவகாசம் கொடுக்குமாறும், மேலும் அவர்கள் கஞ்சா பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அவர்கள் மதியம் சுமார் 1 மணியளவில் வீடு திரும்பிய நிலையில், டிவிஷா மதியம் 3:11 மணிக்கு அழகு நிலையத்திற்குச் சென்று, மாலை சுமார் 6:11 மணியளவில் திரும்பி வந்துள்ளார். பின்னர், டிவிஷா போபாலைவிட்டு "நிரந்தரமாக" விட்டு வெளியேற முடிவு செய்ததாக சிபிஐ கூறுகிறது. இரவு சுமார் 9:20 மணியளவில், ட்விஷா ராஷி அப்ரோலுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முதுகுவலி காரணமாக சமர்த்தை படுக்கையறையில் உறங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும் நடந்துகொண்டதாகவும் அவர் ராஷியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
இரவு 9:29 மணிக்கு, ட்விஷா ஒரு அழைப்பிற்குப் பதிலளித்துள்ளார், ஆனால் அவர் மிகவும் அழுதுகொண்டிருந்ததால் அர்த்தமுள்ள உரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இரவு 9:36 மணிக்கு, "இப்போதே என்னை நிம்மதியாக இறக்க விடுங்கள்" என்ற செய்தி வந்துள்ளது. பின்னர் இரவு சுமார் 9:40 மணியளவில், அவர் தனியாக மாடியை நோக்கிச் செல்வதை சிசிடிவி பதிவு செய்துள்ளது. இரவு 9:41 மணிக்கு, அவர் தன் தந்தையிடம் அழுதுகொண்டே, பெற்றோரை விரைவாக வருமாறும் வந்து தன்னை கூட்டி செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரவு சுமார் 10:05 மணியளவில் டிவிஷா தன் தாயிடம் பேசியுள்ளார். அதன்பிறகு டிவிஷாவின் தாய் அவளைத் திரும்பத் திரும்ப அழைக்க முயன்றுள்ளார். பின்னர் குற்றப்பத்திரிகையின்படி, அவர் சமர்த்தையும் அழைக்க முயன்றுள்ளார். ஆனால் அழைப்புகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை. இரவு சுமார் 10:10 மணியளவில், அவர் கிரிபாலாவை அழைத்து, டிவிஷா மிகவும் அழுதுகொண்டிருந்ததால் அவரைப் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் டிவிஷாவின் தாய்.
இரவு சுமார் 10:16 மணியளவில் கிரிபாலா தனது முதல் மாடி அறையிலிருந்து வெளியே வந்து, கீழே டிவிஷாவின் படுக்கையறைக்குச் செல்வதை சிசிடிவி காட்டுவதாக சிபிஐ கூறுகிறது. டிவிஷாவைக் காணாததால், இரவு 10:18 மணியளவில் அவர் டிவிஷாவை அழைத்துள்ளார். இரவு சுமார் 10:21 மணியளவில், கிரிபாலா சமர்த்தை அழைத்துள்ளார். இரவு 10:23 மணியளவில், கிரிபாலாவும் அவரைத் தொடர்ந்து சமர்த்தும் மொட்டை மாடியை நோக்கிச் செல்வதை சிசிடிவி காட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், ட்விஷாவை சமர்த், அவரது உறவினர் மற்றும் ஒரு வீட்டு உதவியாளர் ஆகியோர் கீழே இறக்கி, போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எய்ம்ஸின் இரண்டாவது பிரேதப் பரிசோதனையில், மரணம் தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன், தாக்குதல் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு டிவிஷாவின் பிரேதப் பரிசோதனை தொடர்பாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. போபால் எய்ம்ஸ் நடத்திய முதல் பிரேதப் பரிசோதனையில், மரணத்திற்கு முன் தூக்கிட்டுக்கொண்டதால் மரணம் நிகழ்ந்தது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை திரித்துக்கூறப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி, மற்றொரு பரிசோதனையைக் கோரினர். மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு ஒன்று மே 24 அன்று இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்தியது.
சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள அந்த அறிக்கை, மரணத்திற்கு முன் தூக்குப்போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம் என்றும், மரணத்தின் விதம் தற்கொலை என்றும் முடிவு செய்தது. குறிப்பிடத்தக்க வகையில், மரணத்திற்கு முன் தாக்குதல் நடந்ததைக் குறிக்கும் மருத்துவ-சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வேறு எந்தக் காயமும் இல்லை என்றும் டெல்லி எய்ம்ஸ் வாரியம் பதிவு செய்தது.
டிவிஷாவின் நாட்குறிப்புகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தடயவியல் உளவியல் மதிப்பீட்டில், அவர் நம்பிக்கையின்மை, நீடித்த உளவியல் பாதிப்பு மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட மனரீதியான கொடுமைக்கு ஆளாகியிருந்தது கண்டறியப்பட்டதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் ஆகியோர் ட்விஷாவுக்கு "தன் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாத" அளவிற்கு மனரீதியான கொடுமையை ஏற்படுத்தியதாக அந்த அமைப்பு இறுதியாக முடிவு செய்கிறது. அதன் அடிப்படையில், இரு குற்றவாளிகளுக்கும் எதிராக BNS-இன் 85, 108 மற்றும் 3(5) பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சிபிஐ விசாரணை முடிவடையவில்லை. மேலும் முக்கியமாக, வரதட்சணைக் கோரிக்கை மற்றும் வரதட்சணைக் கொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக BNSS இன் பிரிவு 193(9) இன் கீழ் விசாரணையைத் தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்