க்ரைம்

“பத்து வருடங்களாக மூடப்பட்டு கிடந்த கம்பெனி” - அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்.. உடல் முழுவதும் வெட்டப்பட்டு கிடந்த சடலம்!

பூட்டப்பட்டிருக்கும் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள சுவரின் ஓட்டை வழியாக உள்ளே சென்று பார்த்தனர்

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அடுத்துள்ள அம்பேத்கர் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்பு கம்பெனி உள்ளது. தொழில் நஷ்டம் அடைந்து வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த கம்பெனியின் கடன் பிரச்சினை காரணமாக குடோனுக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கம்பெனி எப்போதும் மூடியே வைக்கப்பட்ட இருந்துள்ளது

இன்று காலை இந்த கம்பெனியிலிருந்து திடீரென யாரோ ஒருவர் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என கூறுவது போல அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பூட்டப்பட்டிருக்கும் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள சுவரின் ஓட்டை வழியாக உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கம்பெனிக்கு உட்புறத்தில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதான சந்துரு என்ற வாலிபர் தலை, கழுத்து முதுகு போன்ற பல இடங்களில், பலத்த வெட்டு காயங்களுடன் ரத்தம் வெளியேறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து உயிரிழந்து கிடந்த சந்துருவின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பல வருடங்களாக இந்த இடம் மூடி கிடந்ததால் அன்றாடம் இங்கு வெளி நபர்கள் சிலர் கஞ்சா,மது, அருந்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் இன்று காலை இந்த கம்பெனி சுற்று சுவர் ஓட்டை வழியாக வாலிபர்கள் சிலர் உள்ளே நுழைந்ததாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புழல் உதவி ஆணையர் சத்யன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகள் பிடிபட்டால் தான் இவர் ஏன் கொலை செய்யப்பட்டார்,கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும். காலையில் மூட்டப்பட்ட கம்பெனியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.