உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான ட்விஷா ஷர்மா, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கை நரகமாக மாறிவிட்டதாக பலமுறை குடும்பத்தினரிடம் கூறியிருந்த ட்விஷா, மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் திடீர் திருப்பம்.
போபாலில் உள்ள தனது திருமணமான வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ட்விஷா ஷர்மா, இறப்பதற்கு முந்தைய நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக, அவரது தோழியுடன் பகிரப்பட்ட குறுஞ்செய்திகள் தெரிவிக்கின்றன. "சிக்கிக்கொண்டது" போலவும், மாட்டிக்கொண்டது போலவும் உணர்வதாகவும், தனது வீட்டையும் நண்பர்களையும் பிரிந்து வாடுவதாகவும் அவர்களிடம் ட்விஷா சமூகவலைத்தளத்தின் வாயிலாகக் கூறியுள்ளார். அவர் நலமாக இருக்கிறாரா? என்று அவர்கள் கேட்டபோது, தனது நிலையை குறைத்துக் காட்ட , தான் நலமாக இருப்பதாகவே ட்விஷா அவர்களிடம் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா, 2024-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் தனது கணவர் சமர்த் சிங்கைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன் பின்பு இருவரும் 2025-ல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மே 12 அன்று, போபாலின் கட்டாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சுருக்கமான பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, ட்விஷா "கயிற்றால் கழுத்தில் கட்டப்பட்டு, மரணத்திற்கு முந்தைய தூக்குதலால்" இறந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, அவர் தூக்கிலிடப்பட்டபோது உயிருடன் இருந்துள்ளார். அவர் ஒரு MBA பட்டதாரி என்றும், டெல்லியில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்றும், மேலும் அழகிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் என்றும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அவர் தனது நண்பர்கள் மற்றும் தாயாருடன் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகள், அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததைக் காட்டுவதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. மே 7 அன்று ட்விஷா தனது தோழியிடம், "நான் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதால் பதட்டமாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் ஏதாவது சாதிக்க விரும்புகிறேன். திருமணம் உங்கள் குடும்பத்தை உருவாக்குகிறது, ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்காக, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வதை நிறுத்த முடியாது" என்று கூறியிருந்தார். மேலும், திருமணத்தில் அவசரப்பட வேண்டாம் என்றும் அவர் தனது தோழிக்கு அறிவுரை கூறியிருந்தார். "திருமண ஆசைக்காக மட்டும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். ஒரு முறை நன்றாக யோசியுங்கள். இப்போதைக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்" என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, அவரது தோழி கவலைப்பட்டு, "நீ நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். உன்னையும் நேசிக்கிறேன். உன்னைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்" என்று பதில் செய்தி அனுப்பியுள்ளார். அதற்கு ட்விஷா, தான் நன்றாக இருப்பதாகவும், வீட்டையும் அவரது நண்பர்களையும் மிஸ் செய்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் நடந்த மற்றொரு உரையாடலில், அவள் தன் தோழியிடம் தான் "சிக்கிக்கொண்டது" போல் உணர்வதாகக் கூறியிருக்கிறார். "நான் சிக்கிக்கொண்டேன். நீ மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள். அதிகம் பேச முடியாது. சரியான நேரம் வரும்போது அழைக்கிறேன்," என்று ட்விஷா குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.
ட்விஷாவின் மனக்கஷ்டம் அவருடைய தாய்க்கு அனுப்பிய செய்திகளில் தெளிவாகத் தெரிந்தது. மேலும், தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி ட்விஷா கேட்டுக்கொண்டுள்ளார். "அம்மா, தயவுசெய்து நாளை என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்," என்று மே 7 அன்று தன் தாய்க்கு அனுப்பிய செய்தியில் ட்விஷா குறிப்பிட்டிருந்தார். தன் கணவர் தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவர் ஒரு வருடமாகத் தன்னைச் சகித்துக்கொள்வது போலத் தோன்றுவதாகவும், மேலும், "தன் கணவரை ஏமாற்றமடையச் செய்ய தான் என்ன செய்துவிட்டேன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றும் ட்விஷா மிகுந்த வேதனையுடன் கூறியிருந்தார்.
மேலும், ட்விஷாவின் கணவன், ட்விஷா ஒரு முறையற்ற குழந்தையைச் சுமப்பதாகக் குற்றம் சாட்டியதாகவும், அக்குழந்தையைக் கலைக்க ட்விஷா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அந்த உரையாடல்கள் மேலும் வெளிப்படுத்துகின்றன. இதனால் கோபமடைந்த ட்விஷா, தன் தாயிடம், "அது யாருடைய குழந்தை என்று அவர் என்னிடம் கேட்கிறார், நான் அதைப் புறக்கணிக்க வேண்டுமா?" என்று கேட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் நடந்த அன்று இரவு 10:05 மணிக்கு ட்விஷா அவரிடம் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பேச்சு வார்த்தையின் போது, அவரது கணவர் அறைக்குள் நுழைந்ததும் அவர் திடீரென அழைப்பைத் துண்டித்துள்ளார்," என்று இந்திய ராணுவ அதிகாரியான ட்விஷாவின் சகோதரர் மேஜர் ஹர்ஷித் ஷர்மா கூறியுள்ளார். "அதன்பிறகு எங்கள் குடும்பத்தினர் அவரையும், சமர்த்தையும், அவரது மாமியாரையும் தொடர்புகொள்ள பலமுறை முயன்றனர், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார். 10 நிமிடங்கள் கழித்து அவரது மாமியார் கிரிபாலா சிங் எண்களின் அழைப்பிற்குப் பதிலளித்தார்.
மேலும் ட்விஷாவின் நிலையைச் சரிபார்க்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர். இரவு 10:20 மணிக்கு அவர் "மூச்சுவிடவில்லை" என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு வந்தவுடன் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு சிசிடிவி கட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், படிக்கட்டு வழியாக மேல் மாடிக்கு சென்ற ட்விஷா பின்னர் கணவர் உட்பட 3 பேரால் சடலமாக கீழே கொண்டுவரப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது, வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமர்த் தலைமறைவாக உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.